டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெடரர் 4–வது சுற்றுக்கு தகுதி + "||" + French Open tennis Federer Qualifying for the 4th round

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெடரர் 4–வது சுற்றுக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெடரர் 4–வது சுற்றுக்கு தகுதி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெடரர் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள 37 வயதான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–3, 6–1, 7–6 (10–8) என்ற நேர்செட்டில் 63–ம் நிலை வீரரான காஸ்பெர் ரூட்டை (நார்வே) தோற்கடித்து 4–வது சுற்றுக்கு 14–வது முறையாக முன்னேறினார். இது பெடரருக்கு 400–வது கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7–வது இடத்தில் உள்ள நிஷிகோரி (ஜப்பான்) 6–4, 6–7 (6–8), 6–3, 4–6, 8–6 என்ற செட் கணக்கில் 32–ம் நிலை வீரரான லாஸ்லோ டெர்ரை (செர்பியா) போராடி வீழ்த்தி 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் மார்ட்டின் கிஜான் (சுலோவாக்கியா), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பிளிஸ்கோவா தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 3–6, 3–6 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 6–3, 6–3 என்ற நேர்செட்டில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் செவஸ்தோவா (லாத்வியா), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), கையா கனெபி (எஸ்தோனியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)–மாரிஸ் காபில் (ருமேனியா) ஜோடி 6–4, 6–4 என்ற நேர்செட்டில் பிரான்சின் பெஞ்சமின் போன்ஜி–அன்டோயன் ஹாங் இணையை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் திவிஜ் சரண் (இந்தியா)–மார்செலோ டிமோலினர் (பிரேசில்) ஜோடி தோல்வி கண்டு நடையை கட்டியது.