அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 9 Sep 2019 1:18 AM GMT (Updated: 10 Sep 2019 12:41 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 2 வாரங்கள் நடந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 5-ம் நிலை வீரரான டேனில் மெட்விடேவை (ரஷியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாகவும், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையிலும் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தனர். முதல் 2 செட்களை ரபெல் நடால் சொந்தமாக்கினார். தொடக்க சரிவில் இருந்து போர்க்குணத்துடன் மீண்டெழுந்த 23 வயது மெட்விடேவ் அடுத்த 2 செட்களை தனதாக்கி அசத்தினார்.

இதனால் ஆட்டம் பரபரப்பான 5-வது செட் வரை நீடித்தது. அந்த செட்டில் 10-வது கேமில் நடால் சர்வீசை பிரேக் செய்ய கிடைத்த வாய்ப்பை மெட்விடேவ் நழுவவிட்டார். அந்த தருணத்தில் அதிரடியாக செயல்பட்ட ரபெல் நடால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி செட்டை தன்வசப்படுத்தினார்.

4 மணி 50 நிமிட நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் டேனில் மெட்விடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மணிக்கு 128 மைல் வேகத்தில் சர்வீஸ் போட்ட மெட்விடேவ் 14 ஏஸ்சர்வீஸ் அடித்தாலும், அவர் பந்தை அதிக முறை (57 தடவை) வெளியே அடித்து விட்டு தவறு இழைத்ததால் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்பை கோட்டை விட்டார். சாம்பியன் பட்டம் வென்றதும் ரபெல் நடால் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் வடித்தார். அத்துடன் மைதானத்தில் உருண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

33 வயதான ரபெல் நடால் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்வது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2010, 2013, 2017-ம் ஆண்டுகளில் வென்று இருந்தார். இந்த ஆண்டில் நடால் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை அதிக முறை வென்றவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை ஜான் மெக்கன்ரோவுடன் (அமெரிக்கா) இணைந்து நடால் பகிர்ந்து கொண்டார்.

இந்த பட்டத்தை ஜிம்மி கார்னர்ஸ் (அமெரிக்கா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), பீட் சாம்பிராஸ் (அமெரிக்கா) ஆகியோர் அதிகபட்சமாக 5 முறை வென்று முதலிடத்தில் உள்ளனர்.



19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ரபெல் நடால் பெற்ற 19-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். அவர் ஆஸ்திரேலிய ஓபனை ஒரு முறையும் (2009), பிரெஞ்ச் ஓபனை 12 முறையும் (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019), விம்பிள்டன் ஓபனை 2 முறையும் (2008, 2010), அமெரிக்க ஓபனை 4 முறையும் (2010, 2013, 2017, 2019) வென்றுள்ளார். ரபெல் நடால் இன்னும் ஒரு பட்டம் வென்றால் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அதிக பட்டம் (20 முறை) வென்ற ஜாம்பவான் வீரரான ரோஜர் பெடரரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்து விடுவார். நடாலுக்கு அடுத்தபடியாக உள்ள செர்பியா வீரர் ஜோகோவிச் 16 பட்டங்கள் வென்று இருக்கிறார்.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரபெல் நடால் ரூ.27½ கோடியும், தொடர்ச்சியாக 2-வது முறையாக நடாலிடம் தோல்வி கண்ட டேனில் மெட்விடேவ் ரூ.13½ கோடியும் பரிசுத் தொகையாக பெற்றனர். மெட்விடேவ் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.



 

பெண்கள் இரட்டையர்

பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்)-சபலென்கா (பெலாரஸ்) ஜோடி 7-5, 7-5 என்ற செட் கணக்கில் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்)-ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

மிகவும் முக்கியமான வெற்றி - நடால்

வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் அளித்த பேட்டியில், ‘இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோப்பை எனக்கு எல்லாமுமாக அமைந்து இருக்கிறது. இறுதிப்போட்டி மிகவும் கடுமையானதாக இருந்தது. ஆக்ரோஷமாக நடந்த இந்த போட்டியில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சித்தேன். ஆனாலும் சில சமயங்களில் அதனை செய்ய முடிவதில்லை. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மெட்விடேவ் கடுமையான சவால் அளித்தார். இதனால் இந்த போட்டி மிகவும் வியக்கத்தக்க வகையில் அமைந்தது. இந்த நாளை மறக்க முடியாது. நான் கடினமான தருணங்களை கடந்து வந்து இருக்கிறேன். உடல் தகுதியில் பிரச்சினை நிலவினால் மனரீதியாக வலுவாக செயல்படுவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை உங்களால் கணிக்க முடியாது. என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் தயாராக வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து மெட்விடேவ் கருத்து தெரிவிக்கையில், ‘இறுதிப்போட்டியில் நான் கடுமையாக போராடினேன். எதிர்பாராதவிதமாக ஆட்டத்தின் போக்கு எனது வழியில் அமையவில்லை. ரபெல் நடால் இந்த வெற்றியின் மூலம் தனது 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது சிறப்பானதாகும். அதேநேரத்தில் நான் தோற்றாலும் கிராண்ட்ஸ்லாமில் எனது முதல் இறுதிப்போட்டியான இதனை மறக்கமுடியாது. இது ஒரு அருமையான போட்டியாக இருந்தது. இந்த சீசன் முழுவதும் எனக்கு சிறப்பாக அமைந்தது. 70 வயது ஆனாலும் கூட நிச்சயம் இந்த ஆட்டம் எனது நினைவில் இருக்கும்’ என்று கூறினார்.




Next Story