வெளிநாட்டு பயணத்தின் போது கிரிக்கெட் வீரர்களுடன் மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் சானியா வலியுறுத்தல்


வெளிநாட்டு பயணத்தின் போது கிரிக்கெட் வீரர்களுடன் மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் சானியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Oct 2019 11:00 PM GMT (Updated: 3 Oct 2019 9:11 PM GMT)

நமது கிரிக்கெட் அணி உள்பட பல விளையாட்டு அணியினர் வெளிநாடு செல்லும் போது அவர்களுடன் அவர்களது மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்து செல்ல அனுமதிப்பதில்லை

புதுடெல்லி, 

டெல்லியில் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது கிரிக்கெட் அணி உள்பட பல விளையாட்டு அணியினர் வெளிநாடு செல்லும் போது அவர்களுடன் அவர்களது மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்து செல்ல அனுமதிப்பதில்லை. இதை நான் பல தடவை பார்த்து இருக்கிறேன். இவர்களை உடன் அழைத்து சென்றால் வீரர்களின் கவனம் சிதறி விடும் என்று காரணம் சொல்வார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? பெண்கள் தான் ஆண்களின் கவனத்தை அதிகமாக சிதறச் செய்கிறார்களா? பெண்களை வீரர்களின் ஊக்கம், பலமாக கருதாமல், ஏன் ஆழ்ந்த பிரச்சினையாக பார்க்கிறீர்கள். வாழ்க்கை துணை உடன் இருக்கும் சமயத்தில், விளையாடி விட்டு தனது அறைக்கு திரும்பும் அந்த வீரர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை பாருங்கள். அவர்கள் அளிக்கும் ஆதரவு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். விராட் கோலி சரியாக ஆடாத போது, அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை விமர்சித்தது முட்டாள்தனமானது.

இவ்வாறு சானியா கூறினார்.

மேலும் சானியா கூறுகையில், ‘நான் சிறுவயதில் டென்னிஸ் விளையாடிய போது எனது உற்றார், உறவினர்கள் எல்லாம், நீ வெயிலில் தொடர்ந்து விளையாடினால், உடல் கறுத்து போய் விடும். அதன் பிறகு ஒருவரும் உன்னை திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள். அதனால் டென்னிசை விட்டு விடு என்று சொன்னார்கள். ஆனால் இதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. இது மாதிரி பேசுவதை நிறுத்தி விட்டு விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டும் பெண்களை சிறுவயதில் இருந்தே ஊக்கப்படுத்த வேண்டும்’ என்றார்.

Next Story