கண்காட்சி போட்டியில் விளையாடிய டென்னிஸ் வீரர் போர்னா கோரிச் கொரோனாவால் பாதிப்பு


கண்காட்சி போட்டியில் விளையாடிய டென்னிஸ் வீரர்  போர்னா கோரிச் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2020 12:15 AM GMT (Updated: 22 Jun 2020 10:01 PM GMT)

கண்காட்சி போட்டியில் விளையாடிய முன்னணி டென்னிஸ் வீரர்கள் டிமித்ரோவ், போர்னா கோரிச் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாண்டிகார்லோ,

கண்காட்சி போட்டியில் விளையாடிய முன்னணி டென்னிஸ் வீரர்கள் டிமித்ரோவ், போர்னா கோரிச் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச டென்னிஸ் போட்டிகள் எதுவும் நடைபெறாததால் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ‘அட்ரியா டூர்’ என்ற பெயரில் நலநிதி டென்னிஸ் கண்காட்சி போட்டியை செர்பியா மற்றும் குரோஷியாவில் நடத்தினார். இந்த போட்டியில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), கிரிகோர் டிமித்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா), போர்னா கோரிச் (குரோஷியா) உள்பட முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கடந்த வாரம் இறுதியில் நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 33-வது இடத்தில் இருக்கும் போர்னா கோரிச், தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள டிமித்ரோவை வீழ்த்தினார். குரோஷியாவில் உள்ள ஜதாரில் நடந்த இந்த போட்டி முடிந்து மொனாக்கோவுக்கு திரும்பியதும் நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட கிரிகோர் டிமித்ரோவுக்கு கொரோனா தொற்று தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. 3 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறியவரான டிமித்ரோவ் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னால் உங்களுக்கு பாதிப்பு உண்டாகி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

போர்னா கோரிச்சும் பாதிப்பு

இதேபோல் இந்த கண்காட்சி போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீரரான போர்னா கோரிச்சுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று வெளியான மருத்துவ பரிசோதனை முடிவில் உறுதியாகி இருக்கிறது. இதனை அவர் சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். இதற்கிடையில் 2 முன்னணி வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள போட்டி அமைப்பாளர்கள் இறுதி சுற்று போட்டியை ரத்து செய்து இருக்கிறார்கள் மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற 2 பயிற்சியாளர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஜோகோவிச் உள்பட மற்ற வீரர்கள் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்யவில்லை.

கண்காட்சி போட்டியை பார்க்க ஆயிரக்கணக்காக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மருத்துவ பாதுகாப்பு விதிமுறைகளை வீரர்களும், பார்வையாளர்களும் முறையாக கடைப்பிடிக்காதது தான் கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்று நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இந்த பாதிப்பு காரணமாக ஆகஸ்டு மாதம் தொடங்க இருக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.


Next Story