டென்னிஸ்

14 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன்: டென்னிஸ் வீரர் ஜோகோவிச் + "||" + Novak Djokovic tests positive for coronavirus after Adria Tour event

14 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன்: டென்னிஸ் வீரர் ஜோகோவிச்

14 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன்:  டென்னிஸ் வீரர் ஜோகோவிச்
உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பெல்கிரேடு, 

அட்ரியா டூர் என்ற பெயரில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டியை செர்பியா மற்றும் குரோஷியா நாடுகளின் இரண்டு நகரங்களில் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) நடத்தினார். இதில் பங்கேற்ற 19-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னோ கோரிச் (குரோஷியா) ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து இறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இந்த போட்டியை முன்நின்று நடத்தி அதில் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக்கொண்ட ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்களது குழந்தை இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.


ஜோகோவிச் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கொரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டாலும் அது தொடர்பான எந்த அறிகுறியும் வெளிப்படவில்லை. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காக வருந்துகிறேன். அவர்களின் உடல்நிலையில் எந்தவித சிக்கலும் இன்றி நல்லபடியாக மீள்வார்கள் என்று நம்புகிறேன். அடுத்த 14 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன். 5 நாட்களுக்கு பிறகு மறுபடியும் என்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வேன்’ என்று கூறியுள்ளார்.

17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான 33 வயதான ஜோகோவிச், ஒரு தொடருக்கு செல்வதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி போடும் நிலை வந்தால் அதை செய்யமாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம்.

இதே போட்டியில் பங்கேற்ற செர்பிய வீரர் விக்டர் டிரோக்கியையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவரும், கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவியும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த கண்காட்சி டென்னிஸ் போட்டியில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டது. ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதையும், கட்டித்தழுவதையும் சகஜமாக பார்க்க முடிந்தது. இரவில் வைக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட வீரர்கள் நடனம் ஆடி கும்மாளம் போட்டனர். இதனால் கொரோனா எளிதில் பரவி விட்டதாகவும், ஜோகோவிச்சே இதற்கு பொறுப்பு என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.