டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + US Open Tennis: Djokovic advances to 3rd round

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 44-ம் நிலை வீரரான கைல் எட்மன்டை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.


முதல் செட்டை டைபிரேக்கரில் கோட்டை விட்ட ஜோகோவிச் அதன் பின்னர் தனது ஆட்ட வேகத்தை அதிகரித்ததுடன் அடுத்த 3 செட்களையும் சொந்தமாக்கி தனது ஆதிக்கத்தை நிரூபித்தார். 3 மணி 13 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்டை துரத்தியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்றில் ஜோகோவிச், 29-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7-6 (7-2), 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மேக்சிம் கிரேசியை தோற்கடித்தும், இன்னொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-7 (8-10), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் பிரன்டன் நகாஹிமாவை வீழ்த்தியும் 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

இதே போல் டேவிட் கோபின் (பெல்ஜியம்), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா), பிலிப் கிராஜினோவிச் (செர்பியா), ரிச்சர்ட் பிரான்கிஸ் (லிதுவேனியா), ஜோர்டான் தாம்சன் (ஆஸ்திரேலியா), பாப்லோ காரெனோ பஸ்டா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் திவிஜ் சரண் (இந்தியா)- நிகோலா காசிச் (செர்பியா) ஜோடி முதல் சுற்றில் தோற்று நடையை கட்டியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியோர்ஜியை எளிதில் விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் தொடர்ச்சியாக 5-வது முறையாக அடியெடுத்து வைத்தார். முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் சக நாட்டவரான அன்னா லினா பிராட்சாமை வீழ்த்தினார். உலக தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், இந்த போட்டிக்குரிய தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 1-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் 50-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வியை தழுவினார். வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), செவஸ்தோவா (லாத்வியா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகிய முன்னணி வீராங்கனைகளின் சவாலும் 2-வது சுற்றுடன் முடிவுக்கு வந்தது.

அதே சமயம் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), பெட்ரா மார்டிச் (குரோஷியா), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), கிராசெவா (ரஷியா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), புதின்சேவா (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நவோமி ஒசாகா
அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேறினார்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போராடி கால்இறுதிக்கு முன்னேறினார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகாவிச் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் செரீனா, டொமினிக் திம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா, ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடியும் அசத்தியது.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிடோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், கிவிடோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.