அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 8 Sep 2020 11:40 PM GMT (Updated: 8 Sep 2020 11:40 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போராடி கால்இறுதிக்கு முன்னேறினார்.

நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-6 (7-4), 6-1, 6-1 என்ற நேர்செட்டில் கனடா வீரர் ஆஜெர் அலியாசிமை விரட்டியடித்து 2-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். டொமினிக் திம் அடுத்து 28-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-1, 6-0 என்ற நேர்செட்டில் பிரான்சிஸ் டியாகோவை (அமெரிக்கா) எளிதில் பந்தாடி முதல்முறையாக கால்இறுதிக்குள் கால்பதித்தார். இன்னொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ருப்லெவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பெரேட்டினியை வீழ்த்தி 2-வது முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் சக நாட்டு வீரர் டேனில் மெட்விடேவை எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை போராடி சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார். 2 மணி 28 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் செரீனா கடந்த மாதம் சின்சினாட்டி ஓபனில் சக்காரியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டார்.

கால்இறுதியில் செரீனா வில்லியம்ஸ், 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு களம் திரும்பி இருக்கும் பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவாவை எதிர்கொள்கிறார். முன்னதாக பிரோன்கோவா 6-4, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்னை அலிஸ் கார்னெட்டை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்ஸ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் சோபியா கெனினுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து 2-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அஸரென்கா (பெலாரஸ்) 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவாவை வெளியேற்றினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) ஜோடி 5-7, 5-7 என்ற நேர்செட்டில் ஜூலியன் ரோஜெர் (நெதர்லாந்து)-ஹோரியா டிகாய் (ருமேனியா) இணையிடம் வீழ்ந்தது.


Next Story