டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’ + "||" + French Open tennis: Polish player SwiTech 'champion'

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.
பாரீஸ், 

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான சோபியா கெனின் (அமெரிக்கா), 54-வது இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை சந்தித்தார்.

இதில் அதிரடியான ஷாட்டுகளால் எதிராளியை திணறடித்த ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் 21 வயதான சோபியா கெனினுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக ‘கிராண்ட்ஸ்லாம்’ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியை பெற ஸ்வியாடெக்குக்கு 1 மணி 24 நிமிடமே தேவைப்பட்டது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை உச்சிமுகர்ந்த முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அவர் ரூ.14 கோடியை பரிசாக அள்ளினார்.

19 வயதான ஸ்வியாடெக் இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்கவில்லை. 2007-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பையையும் தனதாக்கினார். இந்த வெற்றியால் நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் 54-ல் இருந்து 17-வது இடத்துக்கு முன்னேறுகிறார். 2-வது இடம் பிடித்த சோபியாவுக்கு ரூ.7 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.

நடால்-ஜோகோவிச் பலப்பரீட்சை

முந்தைய நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை (கிரீஸ்) போராடி வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் மகுடத்துக்கான ஆட்டத்தில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ‘களிமண் தரை கதாநாயகன்’ ரபெல் நடாலுடன் (ஸ்பெயின்), ஜோகோவிச் மோதுகிறார். இந்த போட்டியில் நடால் வாகை சூடினால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதுடன், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். ஜோகோவிச் வென்றால் அவருக்கு இது 18-வது கிராண்ட்ஸ்லாமாக அமையும்.

இருவரும் இதுவரை 55 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றனர். இதில் ஜோகோவிச் 29 முறையும், நடால் 26 தடவையும் வென்றுள்ளனர். பிரெஞ்ச் ஓபனில் 7 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 2 நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.