ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம் - சாதனையை நோக்கி நடால், செரீனா


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம் - சாதனையை நோக்கி நடால், செரீனா
x
தினத்தந்தி 7 Feb 2021 4:46 AM IST (Updated: 7 Feb 2021 4:46 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பட்டம் வென்றால் நடால், செரீனா புதிய சாதனை படைப்பார்கள்.

மெல்போர்ன்,

ஆண்டுதோறும் 4 வகையிலான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வழக்கமாக ஜனவரி மாதத்தில் நடைபெறும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 3 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டி மெல்போர்னில் நாளை தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அனைத்து வீரர், வீராங்கனைகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோர் இடையே பட்டம் வெல்வதில் கடும் போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய ஓபனை அதிக முறை ருசித்தவரான (8 முறை) ஜோகோவிச் முதலாவது சுற்றில் ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) சந்திக்கிறார். கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் அவர் கால்இறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவையும் (ஜெர்மனி), அரைஇறுதியில் டொமினிக் திம்மையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

நடால் பட்டத்தை வசப்படுத்தினால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (20 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை தகர்த்து விடுவார். ஆனால் முதுகுவலியால் அவதிப்படும் நடால் முழு உத்வேகத்துடன் ஆடுவாரா? என்பது சந்தேகம் தான். முதல் சுற்றில் அவர் லாஸ்லோ ஜெரேவை (செர்பியா) சந்திக்கிறார்.

அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் முதல் சவாலை மிகைல் குகுகிஷ்கினுடன் (கஜகஸ்தான்) தொடங்குகிறார். மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), பெரேட்டினி (இத்தாலி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகிய முன்னணி வீரர்களும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். ஒற்றையர் பிரிவில் களம் காணும் ஒரே இந்தியரான வைல்டு கார்டு மூலம் பிரதான சுற்று வாய்ப்பை பெற்றுள்ள 139-ம் நிலை வீரரான சுமித் நாகல் முதல் சுற்றில் தரவரிசையில் 72-வது இடத்தில் உள்ள ரிக்கார்டஸ் பெரன்கிஸ்சை (லிதுவேனியா) எதிர்கொள்கிறார். சுமித் நாகலை பொறுத்தவரை முதல்தடையை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும். காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் இந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடவில்லை.

பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் மகுடம் சூட பல நட்சத்திரங்கள் கோதாவில் குதிக்கிறார்கள். இதில் நடப்பு சாம்பியன் சோபியா கெனின் (அமெரிக்கா), 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), நம்பர் ஒன் புயல் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), முன்னாள் சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

சோபியா கெனின், ஆஸ்திரேலியாவின் வைல்டு கார்டு சலுகை பெற்ற மேடிசன் இங்லிசையும், ஒசாகா, ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவையும், ஆஷ்லி பார்ட்டி, மோன்ட்னெக்ரோவின் டான்கா கோவினிச்சையும், செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் லாரா சிஜ்முன்டையும் தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்கள்.

இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 39 வயதான செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்ல முடியாமல் போராடுகிறார். இளம் பட்டாளத்துக்கு மத்தியில் அவரது ஆக்ரோஷம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து தான்பார்க்க வேண்டும். அவர் இன்னும் ஒரு பட்டத்தை உச்சிமுகர்ந்தால், பெண்களில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.447 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் வாகை சூடும் வீரர், வீராங்கனை தலா ரூ.15½ கோடி பரிசுத்தொகையுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெறுவார்கள். கொரோனா பின்னடைவுகளால் பட்டம் வெல்வோருக்கு பரிசுத்தொகை கடந்த முறையை விட 33 சதவீதம் அதாவது ரூ.7¼ கோடி குறைக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோற்போருக்கு ரூ.8½ கோடி கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.3½ கோடி கிட்டும். அதே சமயம் முதல் சுற்றில் இருந்து 4-வது சுற்று வரை வெற்றி பெறுவோரின் பரிசுத்தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.55 லட்சத்தை தட்டிச் செல்வார்கள்.

முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story