ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச் போராடி வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச் போராடி வெற்றி
x
தினத்தந்தி 11 Feb 2021 12:07 AM GMT (Updated: 11 Feb 2021 12:07 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்றார்.

மெல்போர்ன், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 64-ம் நிலை வீரரான 23 வயது பிரான்சஸ் டிபோவை (அமெரிக்கா) சந்தித்தார்.

3½ மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்சஸ் டிபோ 2-வது செட்டை தனதாக்கியதுடன், அடுத்த செட்டில் டைபிரேக்கர் வரை கடும் சவால் அளித்தார். முடிவில் ஜோகோவிச் 6-3, 6-7 (3-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

வெற்றிக்கு பிறகு ஜோகோவிச் கூறுகையில், ‘மிகவும் கடுமையான சவால் அளித்த டிபோவை பாராட்ட விரும்புகிறேன். அவரது ஆட்டம் அருமையாக இருந்தது. அவர் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டார். வெப்பம் காரணமாக ஆடுவதற்கு கடினமாக இருந்தது. நான் இதுபோன்ற சூழ்நிலையை சந்திப்பது முதல்முறையல்ல. எனவே இதுபோன்ற நிலையை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும்’ என்றார்.

டொமினிக் திம் அபாரம்

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-0, 6-2 என்ற நேர்செட்டில் 70-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டொனிமிக் கோபெரை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 5-7, 1-6, 6-4, 6-2, 6-7 (9-11) என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீரரான மார்டோன் பாசோவிக்சிடம் (ஹங்கேரி) போராடி வீழ்ந்தார். 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் டைபிரேக்கரில் வாவ்ரிங்கா இழைத்த தவறு அவருக்கு பாதகமாக அமைந்தது.

மற்ற ஆட்டங்களில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மான் (அர்ஜென்டினா), டிமிட்ரோவ் (பல்கேரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பெலிக்ஸ் ஆஜெர் அலியாசிம் (கனடா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), துசென் லோஜோவிக் (செர்பியா) ஆகியோர் 2-வது சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.

செரீனா முன்னேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர்செட்டில் நினா ஸ்டோஜனோவிச்சை (செர்பியா) எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 43-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) சாய்த்தார். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 4-6, 6-4, 7-5, என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்ஜனோவிக்கை வீழ்த்தினார்.

2 முறை விம்பிள்டன் சாம்பியனான கிவிடோவா (செக்குடியரசு) 4-6, 6-1, 1-6 என்ற செட் கணக்கில் 68-ம் நிலை வீராங்கனையான சோரானா கிறிஸ்டியிடம் (ருமேனியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரமான 40 வயது வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 1-6, 0-6 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய இத்தாலியின் சாரா எரானியிடம் பணிந்தார். இதேபோல் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) 3-6, 2-6 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சு வி சிக்யிடம் வீழ்ந்தார்.

போபண்ணா ஜோடி வெளியேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-பென் மெக்லாச்லன் (ஜப்பான்) ஜோடி 4-6, 6-7 (0-7)என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ மூலம் வாய்ப்பு பெற்ற தென்கொரியாவின் ஜி சுங் நாம்-மின் கு சாங் இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது. 

Next Story