டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’ + "||" + Australian Open tennis: Japan's Naomi Osaka 'champion'

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா நேர் செட்டில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்), 24-ம் நிலை வீராங்கனை ஜெனிபர் பிராடியை (அமெரிக்கா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இ்ந்த மோதலில் பிராடி தொடக்கத்தில் கடும் சவால் கொடுத்தார். இருவரும் தலா ஒரு கேம் வீதம் பிரேக் செய்த நிலையில் 4-4 என்று வரை சமனிலையில் இருந்தனர்.

அதன் பிறகு தனது அதிரடியான ஷாட் மற்றும் அதிவேகமான சர்வீஸ்களால் எதிராளியை தடுமாற வைத்த ஒசாகா தொடர்ச்சியாக 6 கேம்களை கைப்பற்றி அசத்தினார். அதாவது முதல் செட்டை வென்றதோடு 2-வது செட்டிலும் 4-0 என்ற கணக்கில் முன்னிலை கண்டார். அதைத் தொடர்ந்து சில கேம்களை பிராடி வசப்படுத்திய போதிலும் ஒசாகாவின் ஆதிக்கத்துக்கு அணை போட முடியவில்லை.

முடிவில் நவோமி ஒசாகா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிராடியை வீழ்த்தி 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை உச்சிமுகர்ந்தார். 1 மணி 17 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 6 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது ஒசாகாவுக்கு வெற்றியை எளிதாக்கியது. சர்வதேச போட்டியில் ஒசாகா தொடர்ச்சியாக ருசித்த 21-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் ஒசாகாவுக்கு இது 4-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அமைந்தது. ஏற்கனவே 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனையும், 2018 மற்றும் 2020-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனையும் கைப்பற்றி இருந்தார்.

கிராண்ட்ஸ்லாமில் கால்இறுதியை தொட்டாலே கிரீடம் தான் என்ற பெருமையை ஒசாகா தக்கவைத்துக் கொண்டார். அத்துடன் கடந்த 50 ஆண்டுகளில், தனது முதல் 4 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்ற 3-வது நபர் என்ற சாதனையையும் படைத்தார். அமெரிக்காவின் மோனிகா செலஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இச்சாதனை பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ளனர்.

வாகை சூடிய ஒசாகாவுக்கு ரூ.15½ கோடியும், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக இறுதிசுற்றை எட்டிய 25 வயதான பிராடிக்கு ரூ.8½ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் ஒசாகா தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறுகிறார். பிராடி டாப்-15 இடத்துக்குள் நுழைகிறார்.

23 வயதான ஒசாகா கூறுகையில், ‘முந்தைய கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ரசிகர்கள் இன்றி விளையாடினேன். இந்த போட்டியில் ரசிகர்களின் உற்சாகம் எனக்கு உத்வேகம் அளித்தது. அவர்களுக்கு நன்றி. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவதை இப்போது மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன்’ என்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ராஜீவ் ராம், செக்குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா கூட்டணி 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்-சமந்தா ஸ்டோசுர் ஜோடியை சாய்த்து பட்டத்தை தட்டிச்சென்றது. ராஜீவ்- கிரெஜ்சிகோவா ஜோடியாக இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வெல்வது இது 2-வது முறையாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செ்ாபியா)- டேனில் மெட்விடேவ் (ரஷியா) இன்று கோதாவில் இறங்குகிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இ்ந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.