இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பிளிஸ்கோவா, ஸ்வியாடெக்


இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பிளிஸ்கோவா, ஸ்வியாடெக்
x
தினத்தந்தி 15 May 2021 11:40 PM GMT (Updated: 15 May 2021 11:40 PM GMT)

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது.

ரோம்,

 இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஒபெல்காவை (அமெரிக்கா) தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார்.

முன்னதாக நடந்த கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தி தொடர்ந்து 8-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். முந்தைய நாள் முதல் செட்டை இழந்து 2-வது செட்டிலும் 1-2 என்ற கணக்கில் ஜோகோவிச் பின்தங்கி இருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்று புத்துணர்ச்சியுடன் களம் கண்ட ஜோகோவிச் சரிவில் இருந்து மீண்டு வெற்றிக்கனியை பறித்து விட்டார். இந்த ஆட்டம் 3 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-1, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) சாய்த்து தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கோகோ காப்பை வெளியேற்றினார். பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக், பிளிஸ்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Next Story