பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்
x
தினத்தந்தி 5 Jun 2021 9:22 PM GMT (Updated: 5 Jun 2021 9:22 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், நடால், சோபியா கெனின் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் ரிகார்டஸ் பெரான்கிசை (லிதுவேனியா) பந்தாடினார். தொடர்ந்து 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபனில் 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து சாதனை படைத்த ஜோகோவிச் அடுத்து 19 வயதான லோரென்ஜோ முசெட்டியை (இத்தாலி) எதிர்கொள்கிறார்.முன்னதாக முசெட்டி 3-6, 6-4, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மார்கோ செச்சினாட்டோவை 3 மணி 7 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார். தனது வாழ்க்கையில் முதல்முறையாக 5 செட்டில் ஆடியுள்ள முசெட்டி அறிமுகமான தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரிலேயே 4-வது சுற்றை அடைந்து கவனத்தை ஈர்த்துள்ளார். இதன் மூலம் 2000-ம் ஆண்டுக்கு பிறகு அறிமுக கிராண்ட்ஸ்லாமிலேயே 4-வது சுற்றை எட்டிய 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

13 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை துவம்சம் செய்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-வது சுற்றை நடால் எட்டுவது இது 50-வது முறையாகும்.

சிட்சிபாஸ் (கிரீஸ்), டியாகோ ஸ்வாட்ஸ்ேமன், லெனர்ட் ஸ்டிரப் (ஜெர்மனி), ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), 33-ம் நிலை வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் (ெசக்குடியரசு) மோதினார். இதில் இரு செட்டுகளிலும் எதிராளியின் தலா 3 சர்வீஸ்களை முறியடித்த கிரெஜ்சிகோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இதே போல் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்(அமெரிக்கா) 6-3, 7-5 என்ற நேர் செட்டில் கரோலினா முச்சோவாவுக்கு (செக்குடியரசு) ‘வேட்டு’ வைத்தார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான சோபியா கெனின் (அமெரிக்கா), சக நாட்டவர் ஜெஸ்சிகா பெகுலாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் பறிகொடுத்த கெனின் அதன் பிறகு சரிவில் மீண்டு அடுத்த இரு செட்டுகளை 6-1, 6-4 வீதம் கைப்பற்றி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (7-4), 6-0 என்ற நேர் செட்டில் கோன்டாவிட்டை (எஸ்தோனியா) சாய்த்தார்.

Next Story