பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜிடன்செக், அனஸ்டசியா


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜிடன்செக், அனஸ்டசியா
x
தினத்தந்தி 9 Jun 2021 12:16 AM GMT (Updated: 9 Jun 2021 12:16 AM GMT)

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ், 

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் தமரா ஜிடன்செக் (சுலோவேனியா) 7-5, 4-6, 8-6 என்ற செட் கணக்கில் 35-ம் நிலை வீராங்கனை பாலா படோசாவை (ஸ்பெயின்) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சுலோவேனியா நாட்டவர் ஒருவர் அரைஇறுதியை எட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் 32-ம் நிலை வீராங்கனையான அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா) 6-7 (2-7), 6-2, 9-7 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) ேபாராடி வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். திரிலிங்கான இந்த ஆட்டம் 2 மணி 33 நிமிடங்கள் நீடித்தது. கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ள 29 வயதான அனஸ்டசியா பாவ்லிசென்கோவா அடுத்து 23 வயதான ஜிடன்செக்குடன் மோதுகிறார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 9-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் மார்டா கோஸ்டியுக்கை (உக்ரைன்) சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு தொடரில் டாப்-10 இடத்திற்குள் எஞ்சியுள்ள ஒரே வீராங்கனையான 20 வயதான ஸ்வியாடெக் அடுத்து மரியா சக்காரியை (கிரீஸ்) இன்று சந்திக்கிறார்.

Next Story