விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்; பெடரரின் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?


விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்; பெடரரின் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?
x
தினத்தந்தி 28 Jun 2021 12:56 AM GMT (Updated: 2021-06-28T06:26:54+05:30)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் 3-வது வருவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனை வென்ற ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) இங்கு மீண்டும் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. சூப்பர் பார்மில் உள்ள அவர் முதல் சுற்றில் இங்கிலாந்து ‘வைல்டு கார்டு’ வீரர் ஜாக் டிராப்பருடன் மோதுகிறார்.

இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் இந்த முறையும் கோப்பையை கையில் ஏந்தினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களான ரோஜர் பெடரர், ரபெல் நடால் ஆகியோரின் சாதனையை (தலா 20 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்து விடுவார். காயம் மற்றும் உடல்தகுதி பிரச்சினையால் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் விலகி உள்ள நிலையில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), பெரேட்டினி (இத்தாலி) ஆகியோர் கடும் சவால் அளிக்க காத்திருக்கிறார்கள்.

8 முறை சாம்பியனான 39 வயதான ரோஜர் பெடரரின் (சுவிட்சர்லாந்து) ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை. இருப்பினும் புல்தரையில் நடக்கும் விம்பிள்டனில் எப்போதும் நன்றாக ஆடுவார். அதனால் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். பெடரர் தனது முதலாவது சுற்றில் 42-ம் நிலை வீரர் அட்ரியன் மனரினோவை (பிரான்ஸ்) எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா) காயத்தாலும், 2-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) மனரீதியான பாதிப்பாலும் விம்பிள்டனில் இருந்து ஒதுங்கி விட்டனர். அதனால் ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), அரினா சபலென்கா (பெலாரஸ்), பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), சோபியா கெனின் (அமெரிக்கா), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஸ்வியாடெக் (போலந்து), ஸ்விடோலினா (உக்ரைன்) உள்ளிட்டோர் மீது கவனம் திரும்பி உள்ளது. இதில் ஆஷ்லி பார்ட்டிக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக தெரிகிறது. அவர் தனது முதல் சுற்றில் சுவாரஸ் நவரோவுடன் (ஸ்பெயின்) மோதுகிறார்.

குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்லாத 39 வயதான செரீனா வில்லியம்சுக்கு, பெண்கள் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை (24 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்ய இன்னும் ஒரு பட்டம் தேவையாகும். அதற்காக தொடர்ந்து போராடும் அவருக்கு விம்பிள்டனிலாவது வெற்றி கனியுமா? என்பதை பார்க்கலாம். செரீனா முதல் ரவுண்டில் பெலாரசின் சாஸ்னோவிச்சை சந்திக்கிறார்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.360 கோடியாகும். இது முந்தைய சீசனை விட 7.85 சதவீதம் குறைவாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.17½ கோடியும், 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.9¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ஏறக்குறைய ரூ.5 கோடி கிடைக்கும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், சிட்சிபாஸ், சபலென்கா, சோபியா கெனின் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.

Next Story