விம்பிள்டன் டென்னிஸ்: அலெக்சாண்டர், ஆஷ்லி பார்ட்டி 3-வது சுற்றுக்கு தகுதி - சானியா ஜோடியும் வெற்றி


விம்பிள்டன் டென்னிஸ்: அலெக்சாண்டர், ஆஷ்லி பார்ட்டி 3-வது சுற்றுக்கு தகுதி - சானியா ஜோடியும் வெற்றி
x
தினத்தந்தி 2 July 2021 12:52 AM GMT (Updated: 2021-07-02T06:22:02+05:30)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அலெக்சாண்டா் ஸ்வெரேவ், ஆஷ்லி பார்ட்டி 3-வது சுற்றை எட்டினர். சானியா ஜோடியும் வெற்றி பெற்றது.

லண்டன், 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6-ம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டெனிஸ் சான்ட்கிரீனை (அமெரிக்கா) சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பெரேட்டினி (இத்தாலி), மெட்விடேவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி) ஆகியோரும் இரண்டாவது சுற்றில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-10 இடத்திற்குள் உள்ள பியான்கா (கனடா), செரீனா (அமெரிக்கா), கிவிடோவா (செக்குடியரசு) ஆகியோர் தொடக்க சுற்றிலேயே நடையை கட்டினர். இந்த வரிசையில் உலகின் 5-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) இணைந்துள்ளார். நேற்று நடந்த 2-வது சுற்றில் ஸ்விடோலினா 3-6, 4-6 என்ற நேர் செட்டில் 44-ம் நிலை வீராங்கனை போலந்தின் மேக்டா லினெட்டியிடம் வீழ்ந்தார்.

அதே சமயம் நம்பர் ஒன் புயல் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பிளின்கோவாவை (ரஷியா) விரட்டி 3-வது சுற்றை எட்டினார்.

சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) தன்னை எதிர்த்த ஜெர்மனியின் ஆன்ட்ரியா பெட்கோவிச்சை 7-5, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். அவர் தொடர்ச்சியாக சுவைத்த 14-வது வெற்றி இதுவாகும். இதே போல் கரோலினா முச்சோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), செவஸ்தோவா (லாத்வியா), பாவ்லிசென்கோவா (ரஷியா) உள்ளிட்டோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெதானி மாடெக் சான்ட்ஸ் கூட்டணி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் அலெக்சா குராச்சி (சிலி)- கிராவ்சிக் (அமெரிக்கா) இணையை வெளியேற்றி 2-வது சுற்றை எட்டியது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி 6-7 (6-8), 4-6 என்ற நேர் செட்டில் கோன்டினென் (பின்லாந்து)- ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) இணையிடம் பணிந்தது.

Next Story