விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர், பெரேட்டினி 4-வது சுற்றுக்கு தகுதி - இங்கிலாந்து இளம் வீராங்கனை சாதனை


விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர், பெரேட்டினி 4-வது சுற்றுக்கு தகுதி - இங்கிலாந்து இளம் வீராங்கனை சாதனை
x
தினத்தந்தி 4 July 2021 2:22 AM GMT (Updated: 4 July 2021 2:22 AM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் பெடரர், இத்தாலியின் பெரேட்டினி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி) 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அஜாஸ் பெடேனை (சுலோவேனியா) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில் முதலாவது செட்டின் போது மழை குறுக்கிட்டதால் ஒன்றரை மணி நேரம் பாதிப்புக்கு பிறகு தொடர்ந்து நடந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இத்தாலி வீரர் லோரென்ேசா சோனிகோ தன்னை எதிர்த்த ஜேம்ஸ் டக்வொர்த்தை (ஆஸ்திரேலியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் விரட்டியடித்து 4-வது சுற்றை உறுதி செய்தார். விம்பிள்டனில் இரு இத்தாலி வீரர்கள் 4-வது சுற்றுக்கு வந்திருப்பது 1955-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

இதே போல் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை வெளியேற்றி 18-வது முறையாக 4-வது சுற்றை எட்டினார். பெடரரின் 1250-வது சர்வதேச வெற்றி இதுவாகும்.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் காயத்தில் இருந்து மீண்டு மறுபிரவேசம் செய்த ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியை தழுவினார். விம்பிள்டனை 2 முறை வென்றவரான அவரை 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 2-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் சாஸ்னோவிச்சை (பெலாரஸ்) சாய்த்தார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் அறிமுகமாகி அசத்தி வரும் தரவரிசையில் 336-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் எம்மா ராடுகனு 3-வது சுற்றில் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் 45-ம் நிலை வீராங்கனையான சோரனா கிர்ஸ்டியாவுக்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து 4-வது சுற்றுக்குள் கால்பதித்தார். ‘ஓபன் எரா’ (1968-ம் ஆண்டுக்கு பிறகு) வரலாற்றில் விம்பிள்டனில் குறைந்த வயதில் 4-வது சுற்றை எட்டிய இங்கிலாந்து வீராங்கனை என்ற சிறப்பை 18 வயதான ராடுகனு பெற்றார்.

கரோலினா முச்சோவா (செக்குடியரசு), கோகோ காப் (அமெரிக்கா), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

Next Story