விண்ணப்பத்தில் தவறான தகவல்: ஜோகோவிச் விளக்கம்


விண்ணப்பத்தில் தவறான தகவல்: ஜோகோவிச் விளக்கம்
x
தினத்தந்தி 12 Jan 2022 11:13 PM GMT (Updated: 12 Jan 2022 11:13 PM GMT)

விண்ணப்பத்தில் தவறான தகவல் குறித்து ஜோகோவிச் விளக்கம் அளித்துள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக மெல்போர்ன் சென்ற ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முறையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி அவரது ‘விசா’வை ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்து தடுப்பு காவலில் வைத்தனர். 

கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றும், போட்டி அமைப்பு குழுவிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்ற பிறகே ஆஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும் ஜோகோவிச் சுட்டிகாட்டினார். பிறகு அங்குள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பை பெற்றார். தற்போது ஆஸ்திரேலிய ஓபனையொட்டி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனாலும் அவரை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு அங்குள்ள குடியேற்ற துறை மந்திரிக்கு அதிகாரம் இருப்பதால் அவர் ஆஸ்திரேலிய ஓபனில் ஆடுவது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

இந்த நிலையில் தான் சமர்ப்பித்த ஆவணங்களில் சில தவறுகள் இருப்பது குறித்து ஜோகோவிச் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், பயண விவர படிவத்தில், ‘ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு வேறு எந்த நாட்டுக்காவது பயணம் மேற்கொண்டீர்களா’ என்று கேட்கப்பட்டிருந்த பகுதியில் தவறுதலாக இல்லை என்று எனது ஏஜென்ட் ‘டிக்’ செய்து விட்டார். மனிதர்கள் தவறிழைப்பது இயல்பு தான். நிச்சயம் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை. நாம் இப்போது கொரோனா பரவலுக்கு மத்தியில் சவாலான காலக்கட்டத்தில் வசிக்கிறோம். சில சமயம் இது போன்று தவறுகள் நடப்பது சகஜம் தான். அது மட்டுமின்றி இதில் விளக்கம் அளித்து கூடுதல் விவரங்களை எனது உதவியாளர்கள் ஆஸ்திரேலிய அரசிடம் வழங்கியுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

இது போன்ற விண்ணப்பத்தில் தவறான தகவல்களை கொடுக்கும் போது அதிகபட்சமாக 12 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.3½ லட்சம் வரை அபராதம் விதிக்க ஆஸ்திரேலிய சட்டத்தில் இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story