ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 15 Jan 2022 9:38 PM GMT (Updated: 15 Jan 2022 9:38 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சின் ‘விசா’ மீண்டும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அவர் இந்த போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரரும், ஆஸ்திரேலிய ஓபனை 9 முறை வென்றவரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அமெரிக்க ஒபன் சாம்பியன் டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) உள்பட 32 முன்னணி வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.

21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் யாருக்கு?

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபெல் நடால், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் தலா 20 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலை வகிக்கின்றனர். இதில் பெடரர் காயம் காரணமாக இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் சர்ச்சையில் சிக்கி சட்ட போராட்டம் மூலம் சாதகமான தீர்ப்பை பெற்ற ஜோகோவிச் சர்ச்சைக்கு மத்தியில் போட்டி அட்டவணையில் இடம் பெற்றுள்ளார். கோகோவிச், நடால் இடையே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்பவர் யார்? என்பதில் நேரடி போட்டி நிலவுவதால் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 35 வயதான நடால் பிரெஞ்ச் ஓபனை 13 முறை வென்று இருந்தாலும், ஆஸ்திரேலிய ஓபனை ஒருமுறை (2009-ம் ஆண்டு) மட்டுமே சுவைத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சின் ஆதிக்கம் தொடருமா? அல்லது அவரது வெற்றிப்பயணத்துக்கு நடால் முட்டுக்கட்டை போட்டு அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உலக சாதனை படைப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்ற 34 வயது ஜோகோவிச் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜோகோவிச் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். ஜோகோவிச்சின் விசா ரத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கோர்ட்டு அவரை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கடந்த 10-ந் தேதி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர் ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

ஜோகோவிச் விசா மீண்டும் ரத்து

இந்த நிலையில் ஆஸ்திரேலிய குடியுரிமை மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை நேற்று முன்தினம் மீண்டும் ரத்து செய்தார்.. இதனால் அவர் மறுபடியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஜோகோவிச் மீண்டும் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன் மீதான இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முடிவை பொறுத்தே ஜோகோவிச் போட்டியில் களம் இறங்குவாரா? என்பதில் இறுதி முடிவு தெரியும். போட்டி தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் ஜோகோவிச்சுக்கு மீண்டும் பிரச்சினை உருவாகி இருப்பதால் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் அவரது கனவுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் நிலை உள்ளது.

ஜோகோவிச் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சக நாட்டு வீரர் மியோமிர் மெக்மனோவிச்சையும், ரபெல் நடால், அமெரிக்காவின் மார்கோஸ் ஜிரோனையும் எதிர்கொள்கிறாரகள். ஜோகோவிச் இந்த போட்டியில் இருந்து விலக நேரிட்டாலும், ரபெல் நடால் பட்டத்தை கைப்பற்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சிட்சிபாஸ், மெட்விடேவ் உள்ளிட்ட வீரர்களின் கடும் சவாலை சமாளிக்க வேண்டியது இருக்கும்.

ஆஷ்லி பார்ட்டி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), சபலென்கா (பெலாரஸ்), சிமோனா ஹாலெப் (ருமேனியா), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) மரியா சக்காரி (கிரீஸ்), பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு), அமெரிக்க ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு (இங்கிலாந்து) ஆகியோர் இடையே பட்டம் வெல்வதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் அவரது கை ஓங்க அதிக வாய்ப்புள்ளது. முதல் சுற்று ஆட்டங்களில் நவோமி ஒசாகா, கொலம்பியாவின் கமிலா ஒசோரியாவையும், ஆஷ்லி பார்ட்டி, உக்ரைனின் சுரென்கோவையும் சந்திக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.405 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.23 ¾ கோடியும், 2-வது இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.11¾ கோடியும் பரிசாக கிடைக்கும். முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.40 லட்சத்தை பெறலாம். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 2, 3, 4 ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story