ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 10:17 PM GMT (Updated: 2022-01-21T03:47:07+05:30)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வியை தழுவினர்.

மெல்போர்ன், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ெதாடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 7-6 (7-1), 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 58 நிமிடம் நடந்தது. தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7-6 (7-1), 6-7 (5-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் பயஸ்சை (அர்ஜென்டினா) சாய்த்தார்.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 6-2, 6-0 என்ற நேர்செட்டில் லிதுவேனியாவின் ரிச்சர்ட்ஸ் பெரான்கிஸ்சை விரட்டியடித்தார். முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4-6, 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டாரோ டேனியலிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் அர்ஜென்டினா வீரர் ஸ்வார்ட்ஸ்மான் 6-7 (6-8), 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கொன்னலிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.

பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), மரின் சிலிச் (குரோஷியா), ஜானிக் சின்னெர் (இத்தாலி), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்) ஆகியோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

சபலென்கா அபாரம்

பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸின்யு வாங்கை சாய்த்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். ருமேனியா வீராங்கனை சிமோனா ஹலெப் 6-2, 6-0 என்ற நேர்செட்டில் பிரேசிலின் பிட்ரிஸ் ேஹடட் மையாவை துவம்சம் செய்தார். அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 3-6, 3-6 என்ற நேர் செட்டில் அலிசி கோர்னெட்டிடம் (பிரான்ஸ்) சரண் அடைந்தார்.

அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவரான இங்கிலாந்தின் இளம் புயல் எம்மா எடுகானு 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 98-ம் நிலை வீராங்கனையான டான்கா கோவினிச்சிடம் (மான்ட்னெக்ரோ) வீழ்ந்து நடையை கட்டினார்.

சானியா ஜோடி முன்னேற்றம்

ஸ்வியாடெக் (போலந்து), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), டாரியா கசட்கினா (ரஷியா), மேடிசன் இங்லிஸ் (ஆஸ்திரேலியா), பாவ்லிசென்கோவா (ரஷியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை சுவைத்தனர்.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணை 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குனிச்- நிகோலா காசிச் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.


Next Story