ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் மெட்விடேவ் போராடி வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் மெட்விடேவ் போராடி வெற்றி
x
தினத்தந்தி 26 Jan 2022 11:46 PM GMT (Updated: 26 Jan 2022 11:46 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் மெட்விடேவ் போராடி வெற்றி பெற்றார்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முதல் இரு செட்டுகளை இழந்து தடுமாறிய ரஷிய வீரர் மெட்விடேவ் அதன் பிறகு எழுச்சி கண்டு வெற்றி பெற்றார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால்இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் பெலிக்ஸ் ஆஜர் அலியாசிம்முடன் (கனடா) மல்லுகட்டினார். 

மெட்விடேவுக்கு கடும் சவால் அளித்த 21 வயதான அலியாசிம் 4-வது செட்டில் 5-4 என்ற முன்னிலையுடன் வெற்றியின் விளிம்புக்கு வந்தார். அப்போது எதிராளியின் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தற்காத்து நிம்மதி பெருமூச்சு விட்ட மெட்விடேவ், அதன் பிறகு சுதாரித்து மீண்டெழுந்து ஒரு வழியாக 5 செட் வரை போராடி அலியாசிம்மை அடக்கினார். 4 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-7 (4-7), 3-6, 7-6 (7-2), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது ஆண்டாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்), 10-வது இடத்தில் உள்ள ஜானிக் சின்னெரை (இத்தாலி) எதிர்கொண்டார். இதில் மணிக்கு அதிகட்சமாக 216 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய சிட்சிபாஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றியை ருசித்து 3-வது முறையாக அரைஇறுதிக்குள் கால்பதித்தார். அரைஇறுதி ஆட்டங்களில் சிட்சிபாஸ்- மெட்விடேவ், ரபெல் நடால்(ஸ்பெயின்)- ெபரேட்டினி (இத்தாலி) சந்திக்கிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் மூத்த வீராங்கனை கனேபியை (எஸ்தோனியா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றிக்காக ஸ்வியாடெக் 3 மணி நேரம் போராட வேண்டி இருந்தது. முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக் ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதியை எட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதே போல் 30-ம் நிலை வீராங்கனையான டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) 7-5, 6-1 என்ற நேர் செட்டில் அலிஸ் கார்னெட்டை (பிரான்ஸ்) சாய்த்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். காலின்ஸ் ஏற்கனவே 2019-ம் ஆண்டிலும் அரைஇறுதி வரை முன்னேறி இருந்தார். இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் காலின்ஸ்- ஸ்வியாடெக், ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா)- மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதுகிறார்கள்.

Next Story