'நம்பர் ஒன் வீராங்கனைக்கு எதிராக விளையாடும் போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை' - ரைபகினா


நம்பர் ஒன் வீராங்கனைக்கு எதிராக விளையாடும் போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை - ரைபகினா
x

Image Courtesy : AFP

தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள வீராங்கனை ஸ்வியாடெக்கை, 25-ம் நிலை வீராங்கனை ரைபகினா தோற்கடித்தார்.

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த 'நம்பர் ஒன்' வீராங்கனையும், கடந்த ஆண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 25-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான எலினா ரைபகினாவுடன் (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்தினார்.

மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் தொடக்கத்தில் 3-0 என்று முன்னிலை கண்ட ஸ்வியாடெக் அதன் பிறகு கோட்டை விட்டார்.

முடிவில் ரைபகினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 89 நிமிடங்களில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக கால்இறுதியில் கால்பதித்தார். தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள வீராங்கனையை ரைபகினா தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும்.

23 வயதான ரைபகினா கூறுகையில், 'நம்பர் ஒன் வீராங்கனைக்கு எதிராக விளையாடும் போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அவர் பந்தை வேகமாக ஓடி திருப்பி அடிக்கக்கூடியர். அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால் தொடக்கம் முதலே அதிரடியாக மட்டையை சுழற்றினேன். இந்த முயற்சிக்கு உண்மையிலேயே பலன் கிடைத்தது' என்றார்.


Next Story