குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 11 Feb 2018 6:03 AM GMT (Updated: 11 Feb 2018 6:03 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடித்த ‘மூன்று முகம்’ படம் எந்த வருடம் வெளியானது? அந்த படத்தின் இயக்குனர் யார்? அது எத்தனை நாட்கள் ஓடியது? (ரஜினி செந்தில், பாப்பம்பட்டி)

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த ‘மூன்று முகம்’ படம், 1983–ம் ஆண்டில் வெளிவந்தது. அந்த படத்தை இயக்கியவர், ஜெகநாதன். படம் வெள்ளிவிழாவை தாண்டி, 250 நாட்கள் ஓடி சாதனை படைத்தது!

***

கமல்ஹாசன் ஜோடியாக அமலா எத்தனை படங்களில் நடித்தார்? (எஸ்.ரவீந்திரன், பட்டுக்கோட்டை)

‘சத்யா’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் கமல்ஹாசன் ஜோடியாக அமலா நடித்து இருந்தார்!

***

குருவியாரே, சமீபத்தில் திரைக்கு வந்த தமிழ் படங்கள் ஒரு வாரம் கூட சரியாக ஓடாமல், பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறதே...அது உண்மையா? (ஆர்.சண்முகராஜன், திருக்கோவிலூர்)

உண்மைதான். இது, தமிழ் பட உலகை சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் பெரும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது!

***

விஜய் சேதுபதி நடித்து வரும் ‘ஜுங்கா’ படம், அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறதே...அந்த படம் எத்தனை கோடியில் தயாராகிறது? (வி.சீனிவாசன், ஸ்ரீரங்கம்)

‘ஜுங்கா’ படத்துக்கு இதுவரை ரூ.14 கோடி செலவாகியிருக்கிறதாம். படத்தை முடிக்க மேலும் சில கோடிகள் தேவைப்படுகிறதாம்!

***

குருவியாரே, ‘அறம்’ படம் நயன்தாராவுக்கு எந்த அளவில் கை கொடுத்தது? (என்.வேணி, திருவண்ணாமலை)

அஜித்குமார் நடிக்க இருக்கும் ‘விசுவாசம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் உள்பட பல நடிகைகள் போட்டி போட்டார்கள். ‘அறம்’ படத்தின் வெற்றிதான் நயன்தாராவுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது!

***

‘மன்னர் வகையறா’ படத்தின் கதாநாயகன் விமல், எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்? அவருடைய சொந்த ஊர் எது? (எஸ்.அக்கீம் பாய், கரூர்)

விமல், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடைய சொந்த ஊர், மணப்பாறை அருகில் உள்ள பன்னாங்கொம்பு!

***

குருவியாரே, ‘கயல்’ பட நாயகி ஆனந்தியிடம், சினேகாவின் சாயல் இருக்கிறதே...இருவரும் உறவினர்களா? (ஏ.பி.கஜேந்திரன், கோவை)

ஆனந்தியிடம், சினேகாவின் சாயல் இருப்பது உண்மைதான். குறிப்பாக அவர் சிரித்தால், சினேகாவை நினைவூட்டுகிறார். ஆனந்தி, சினேகாவின் தங்கை என்று சொன்னால் நம்பி விடுவார்கள். ஆனால், அது உண்மை அல்ல. இருவருக்கும் இடையே ‘நடிகை’ என்ற பந்தம் தவிர, வேறு எதுவும் கிடையாது!

***

நடிகராக இருந்து கிறிஸ்தவ மத போதகராக மாறிய ஏவி.எம்.ராஜன்–புஷ்பலதா தம்பதிகள், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எங்கு வசிக்கிறார்கள்? (அ.விக்டர் ஜான், திருமுல்லைவாயில்)

ஏவி.எம்.ராஜன்–புஷ்பலதா தம்பதிகள் கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார்கள். இருவரும் சென்னையில்தான் வசிக்கிறார்கள்!

***

குருவியாரே, நடிகை ஸ்ரீதேவி வசீகர தோற்றத்துக்காக மூக்கு ஆபரே‌ஷன் செய்து கொண்டாராமே...அப்படியா? (எஸ்.அரிகிருஷ்ணன், கோணலூர்)

ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தபோதும், ‘16 வயதினிலே’ படத்தில் கதாநாயகியாக நடித்தபோதும், அவருக்கு மூக்கு பெரிதாக இருந்தது. முக வசீகரத்துக்காக அவர் மூக்கு ஆபரே‌ஷன் செய்து கொண்டது, உண்மைதான்!

***

சிவாஜி–தேவிகா ஜோடியாக நடித்த படங்களில் அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் எது? (ஜி.கோபால், திருப்பூர்)

‘பாவமன்னிப்பு!’ இருவரும் ஜோடியாக நடித்த ‘ஆண்டவன் கட்டளை,’ ‘முரடன் முத்து,’ ‘கர்ணன்’ ஆகிய படங்களும் முதலுக்கு மோசமில்லாமல் ஓடி, அந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன!

***

குருவியாரே, கீர்த்தி சுரேஷ் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் படித்தது, வளர்ந்தது எங்கே? (ஆர்.தங்கராஜ், சேலம்)

கீர்த்தி சுரேஷ், கேரளாவை சேர்ந்தவர். அவர் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்...!

***

‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாரே...அவர் என்ன வேடத்தில் நடிக்கிறார்? (சி.ஆர்.தட்சிணாமூர்த்தி, புதுச்சேரி)

‘விசுவாசம்’ படத்தில், ஒரு சமூக கருத்து கருவாக வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கருத்து தொடர்பான ஒரு முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார்!

***

குருவியாரே, வடிவேல், சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக மாறியது போல், அடுத்து கதாநாயகன் ஆகப்போகும் நகைச்சுவை நடிகர் யார்? (கே.ராஜேந்திரன், தஞ்சை)

அடுத்து கதாநாயகன் ஆகப்போகும் நகைச்சுவை நடிகர், ஜெகன்! ‘அயன்’ படத்தில் சூர்யாவின் நண்பராகவும், தமன்னாவின் அண்ணனாகவும் நடித்தவர், இவர்!

***

எம்.ஜி.ஆர்.–சிவாஜியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த சரோஜாதேவியும், கே.ஆர்.விஜயாவும் இப்போது நடிக்கிறார்களா, இல்லையா? இருவரும் வசிப்பது எங்கே? (ஏ.உதயகுமார், துவரங்குறிச்சி)

சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா இருவருமே தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்கள். சரோஜாதேவி பெங்களூரிலும், கே.ஆர்.விஜயா கேரளாவிலும் வசித்து வருகிறார்கள்!

***

குருவியாரே, ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படம் எப்போது திரைக்கு வரும்? (ஆர்.சாய்ராம், போரூர்)

‘டிக் டிக் டிக்’ படத்தை மார்ச் மாதம் திரைக்கு கொண்டுவர முடிவு செய்திருந்தார்கள். மார்ச் 1–ந் தேதி முதல் ‘ஸ்டிரைக்’ தொடங்குகிறது என்ற தகவலை தொடர்ந்து, அந்த படத்தின் ‘ரிலீஸ்’ தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது!

***

நிவேதா பெத்துராஜ் எந்த ஊரை சேர்ந்தவர்? ஆந்திராவா, கேரளாவா? (பி.ஆனந்த், ஈரோடு)

நிவேதா பெத்துராஜின் பூர்வீகம், மதுரை. அவர் வளர்ந்தது, படித்தது எல்லாம் துபாயில்!

***

குருவியாரே, அழகும், நடிப்பு திறமையும் இருந்தும் நித்யாமேனன், மியா ஜார்ஜ் ஆகிய இருவருக்கும் இங்கே (தமிழ் திரையுலகில்) பெரிய வரவேற்பு இல்லையே, ஏன்? (எஸ்.ராஜராஜன், பண்ருட்டி)

நித்யாமேனன், மியா ஜார்ஜ் இருவரும் வருகிற பட வாய்ப்புகள் போதும்...இறங்கிப்போய் வாய்ப்பு கேட்க வேண்டியதில்லை என்ற கொள்கையுடன் இருக்கிறார்கள். அதுவே இருவரின் பலவீனமாக அமைந்து விட்டது!

***

மறைந்த வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பாவுக்கும், தற்போதைய வில்லன் பிரகாஷ்ராஜுக்கும் என்ன ஒற்றுமை? (மே.ஸ்ரீகாந்த், கொடைக்கானல்)

இருவருமே மிரட்டலான வில்லன்கள். பி.எஸ்.வீரப்பா வில்லனாக நடித்துக் கொண்டே படங்களை தயாரித்தும் வந்தார். அவரைப்போலவே பிரகாஷ்ராஜும் நடித்துக் கொண்டே படங்களை தயாரித்தும் வருகிறார்!

***

குருவியாரே, திரிஷாவுக்கு சரியான போட்டி யார்? சமந்தாவா, கீர்த்தி சுரேசா? (ஜே.சுரேஷ், திட்டக்குடி)

இருவருமே இல்லை. நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரும்தான் திரிஷாவுக்கு சரியான போட்டி!

***

‘களவாணி–2’ படத்தை தயாரிப்பதில் என்ன பிரச்சினை? (எம்.குமரவேலன், கொண்டலாம்பட்டி)

அந்த ‘டைட்டில்’ எனக்குத்தான் சொந்தம் என்று தயாரிப்பாளரும், டைரக்டரும் உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதுதொடர்பாக இருவரும் தங்கள் சங்கங்களில் புகார் செய்து இருக்கிறார்கள்.

***

Next Story