பாலியல் வன்முறை: பாதிக்கப்பட்ட நடிகைகளின் கசப்பான அனுபவங்கள்


பாலியல் வன்முறை: பாதிக்கப்பட்ட நடிகைகளின் கசப்பான அனுபவங்கள்
x
தினத்தந்தி 18 Feb 2018 10:00 AM GMT (Updated: 18 Feb 2018 9:46 AM GMT)

பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகுவது அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பிட்டு இந்த பருவத்தில்தான் பாதிப்பு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை.

பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகுவது அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பிட்டு இந்த பருவத்தில்தான் பாதிப்பு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. எல்லா பருவத்திலும், எல்லா இடங்களிலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் முன்பு அமைதியாக இருந்த பெண்கள் இப்போது கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தைரியமாக வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நடிகைகளும் விதிவிலக்கல்ல. அவர்கள் வெளிப்படையாக பேசுவது, சராசரி பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவதாக அமைந்திருக்கிறது.

சில நடிகைகள் தாங்கள் சந்தித்த துயரங்களை வெளிப்படுத்துகிறார்கள்!

சித்ராஷி ராவத் (தொலைக்காட்சி நடிகை):

“பாலியல் தொந்தரவுகள் பெண்களுக்கு எந்த பருவத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் சிறுவயதில் பாலியல் தொந்தரவு ஏற்படும்போது மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகிவிடுவோம். வீட்டில் சொல்லுவதா- வேண்டாமா? எப்படி எதிர்நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றெல்லாம் தெரியாமல் தடுமாறிவிடுவோம். இந்த நிலைமாற சிறுவயதில் பாலியல் விழிப் புணர்வு கல்வி அவசியம். குட் டச், பேட் டச் என்று சொல்லப்படும் தொடுதல் விஷயங்களை எல்லாம் பள்ளிப்பருவத்திலேயே சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.

நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது ஆக்கி விளையாடச் செல்வேன். அதற்காக குட்டை பாவாடை அணிய வேண்டி இருக்கும். நான் வெளியே செல்லும்போது ஒரு இளைஞன் என்னை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். நான் பலமுறை எச்சரிக்கை செய்தேன். பலனில்லை. வீட்டில் சொல்லவும் பயம். வீட்டில் சொன்னால் விளையாடவே போகவேண்டாம் என்று தடுத்து விடுவார்கள். அவர்களுக்குத்தெரிந்த பாதுகாப்பு முறை அது ஒன்று தான்.

என்ன செய்வதென்று யோசித்தேன். அன்று அவன் என்னை பின்தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில், எதிரில் ஒரு போலீஸ்காரர் வந்துகொண்டிருந்தார். ஓடிப்போய் அவரிடம் சொன்னேன். அவர் அவனைப் பிடித்து உதைத்து கடுமையாக எச்சரித்தார். பொது மக்களும் கூடிவிட்டார்கள். அவர்களும் அவனை திட்டினார்கள். அன்றிலிருந்து அந்த இளைஞன் பின் தொடருவதில்லை.

இன்னொருமுறை தோழிகளோடு விளையாட சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த நான்கைந்து இளைஞர்கள் சத்தமாக எங்களை கேலி செய்தனர். அதில் ஒருவன் ஓடிவந்து என் இடுப்பைத்தொட்டான். நான் கத்தினேன். உடனே என் தோழிகள் எல்லோரும் சூழ்ந்துகொண்டு அவனை ஆக்கி மட்டையால் அடிபின்னிவிட்டார்கள். அவர்கள் தப்பித்து தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். வெளியில் போகும் பெண்கள் பயத்தை ஓரம் கட்டிவிட்டு, தைரியத்தோடு செயல்பட்டு என்ன வந்தாலும் சமாளிக்க வேண்டும்”

பிரியம்வதா (தொலைக்காட்சி நடிகை):


“நான் பாலியல் தொல்லைகளை சிறுவயதிலிருந்தே அனுபவித்திருக்கிறேன். பள்ளிக்கு பயந்து பயந்து படிக்கப் போக வேண்டியிருந்தது. வேண்டுமென்றே மேல வந்து மோதிவிட்டு சாரி கேட்பார்கள். வெட்டியாக வந்து, மணி எத்தனை என்று கேட்பார்கள். ஒருவர் பின் தொடர்ந்து வந்து லவ் லெட்டர்கூட கொடுத்தார். அதை எல்லாம் வீட்டில் சொன்னால் நமக்கே வம்பாக முடிந்து விடும்.

என்னுடைய தோழி ஒருத்தி, வம்பு செய்தவனை நடுத்தெருவில்வைத்து கடுமையாக தாக்கிவிட்டாள். காலில் கிடந்த செருப்பால் அவனை, அவனது நண்பர்கள் முன்னால் வைத்தே அடித்துவிட்டாள். அந்த ஆத்திரத்தில் அவன் சில நாட்கள் கழித்து ஆசிட்டை அவள் முகத்தில் வீசிவிட்டான்”

சனா கான் (இந்தி நடிகை)

“சினிமாவில் நடிக்க எவ்வளவோ ஆசையோடு வந்தேன். இங்கே வந்த பின்புதான் அந்தரங்கமான பல விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். தயாரிப்பாளர் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய ஆளை அனுப்புவார். இந்தப் படத்தில் உங்களை நடிக்கச் சொல்லி தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். ஆனால்...? என்று இழுப்பார். ஆனால் கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கனும் என்பார். அதையெல்லாம் பண்ண முடியாத காரணத்தால் நான் வளரவேயில்லை. உடன் பணிபுரியும் துணை நடிகர்கள் பெரும்பாலும் இதுபோன்ற தரகர் வேலை தான் பார்க்கிறார்கள். வலிய வந்து பேசுவார்கள்.

ஒரு படத்திற்காக என்னை தேர்வு செய்துவிட்டுப் போனவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் என்னவென்று கேட்டனுப்பினேன். பின்பு ஒரு துணை நட்சத்திரம் என்னை பார்க்க வந்தார். உங்களை தேர்வு செய்து வைத்திருக் கிறார்கள். ஆனால் 3, 4 பேரை அட்ஜஸ்ட் பண்ண வேண்டும். அதான்.. என்று இழுத்தார். நான் கதிகலங்கிப் போனேன். நான் என்ன விபசாரியா? என்னால் அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரை அனுப்பிவிட்டு ரொம்ப நேரம் அழுதுக் கொண்டிருந்தேன்.

நடிகைகள் பலர் கடந்துவரும் பாதை இதுதான். வெளியில் சொல்ல முடியாது. சொன்னால், திரையுலகம் மொத்தமும் சேர்ந்து நம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடும். ஒருவேளை நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை வெளியே சொன்னாலும், சம்பந்தப்பட்ட நபர் யார் என்று வெளியே சொல்லமாட்டார்”

ஷில்பா சிந்தே (தொலைக்காட்சி நடிகை)

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர் இவர். பிரபலமான நடிகையான ஷில்பா தயாரிப்பாளர் சஞ்சய் கோக்லே மீது தொடர்ந்து பாலியல் புகார் கொடுத்து வந்தார். “சஞ்சய் பல விதங்களில் என்னை துன்புறுத்தினார். ஒரு கட்டத்திற்குமேல் என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. அதனால்தான் புகார் கொடுத்தேன்” என்கிறார்.

இவ்வளவு நாள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என்று கேட்டால், “எனக்கு வரவேண்டிய பணம் ரூ.40 லட்சம் பாக்கி இருக்கிறது. இன்றுவரை என் உழைப்பிற்கு ஊதியம் தரப்படவில்லை” என்கிறார். இதுபற்றி தயாரிப்பாளரிடம் கேட்டபோது, “ இது எல்லா இடத்திலும் நடக்கும் சாதாரண விஷயம். இதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துகிறார் என்று தெரியவில்லை”என்கிறார்.

சோபி சவுத்ரி:

“எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற வார்த்தையைக் கடந்துதான் வரவேண்டும். சில சமயம் நல்லவர்கள் போல வாய்ப்புக் கொடுத்து விடுவார்கள். படம் பாதி வளர்ந்ததும் மெதுவாக ‘அட்ஜஸ்ட்மென்ட்’ பற்றி பேசுவார்கள். ஒத்துவராவிட்டால் இத்தோடு உங்கள் சேவையை நிறுத்திக் கொள்ளுங்கள். வேறு ஆளைப் போட்டுக்கொள்கிறோம் என்பார்கள். அப் படியே தொடர்ந்து நடித்தாலும், தரவேண்டிய சம்பளத்தை தரமாட்டார்கள்.. சரி படமே வேண்டாம் என்று விலகிக் கொண்டால் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு நடிக்கவரவில்லை என்று வழக்கு போடுவார்கள்.

ஒரு நடிகையை சுற்றி இருப்பவர்கள் பலரும் தரகர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் நடிப்பதை விட அதிகமாக இதில் சம்பாதிப்பார்கள். பெரும் போராட்டத்திற்கு நடுவே தான் நடிகைகள் வாழவேண்டி உள்ளது. சில நடிகைகள், உடன் நடிக்கும் நடிகர்களின் காதல் வலையில் விழுந்து விடுவார்கள். அந்த நடிகர்கள் உண்மையாக நேசிப்பது போல நடித்து சமயம் பார்த்து அவர்களை மற்றவர்களோடு ‘அட்ஜஸ்ட்’ செய்ய கட்டாயப்படுத்துவார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நடிகைகள் தற்கொலை செய்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட கொடூரமெல்லாம் சர்வ சாதாரணமாக திரை உலகில் நடக்கும்.

இவ்வளவு கொடுமைகள் நடந்த பின்பும் நடிகைகள் தனக்கு தொந்தரவு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குனர்கள் பெயரை வெளியிட தயங்குகிறார்கள். அப்படி வெளியிட்டுவிட்டால் அவர்களது திரையுலக வாழ்க்கையே அஸ்தமித்து விடும்”


Next Story