நடிகை ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்?


நடிகை ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்?
x
தினத்தந்தி 26 Feb 2018 8:32 AM GMT (Updated: 26 Feb 2018 8:32 AM GMT)

ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதம் ஏன்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. #RIPSridevi #Sridevi

சென்னை

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் கோலோச்சி, இந்தி சினிமாவின் ராணியாக வலம் வந்த  ஸ்ரீ தேவி, இப்போதும் இந்திய ரசிகர்கள் மனதில் நிறைந்து உள்ளார்.

இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது .

ஆம், ஸ்ரீதேவி 54 வயதில் இந்த பூவுலகைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்பதே அது. 

அவர் துபாயில் ஒரு திருமண நிகழ்வில் இருந்தபோது, அவர் மாரடைப்பால்  இறந்தார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது உடல் நிலையில் எப்போதும் மிகவும் கவனமாக இருக்கும் ஒரு பிரபலம் இதுபோல சட்டென்று இறந்துபோவது நம்பமுடியாத ஒரு விஷயம்.

இன்றும் அவரது உடல் துபாயில் இருந்து இந்தியா கொண்டுவரப்படவில்லை.  அம்பானிக்கு சொந்தமான தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனி விமானம் நேற்று பிற்பகல் துபாய் சென்றுள்ளது. ரிலையன்ஸ் டிரான்ஸ்மிஷன் அண்ட் டிராவல் லிமிடெட் நிறுவனமான எம்பிரேர்-135 பி.ஜே., 13- இருக்கை தனியார் ஜெட், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் துபாய் சென்றது. துபாயில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்குள் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. துபாய் போலீசாரின் தடயவியல் துறையில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அவரது ரத்த பரிசோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மாலை 5.30 மணி அளவில் தான் அவரின் உடல் இந்தியாவுக்கு தனி விமானம் மூலம் புறப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தடயவியல் துறை ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைத்ததும் முஹைஸ்னா கொண்டு செல்லப்பட்டு எம்பாமிங் செய்யப்படுகிறது. எம்பாமிங் செய்ய 90 நிமிடங்கள் ஆகும்.

துபாய் போலீசார் இறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகு இந்திய தூதரகம் ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். பின்னர் இமிகிரேஷன் துறையில் முடிக்க வேண்டிய ஃபார்மாலிட்டிகளை முடிக்க வேண்டும்.

அதன்பின் , ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என்று பப்ளிக் ப்ராசிகியூட்டர் அனுமதி அளிக்க வேண்டும். அதன் பிறகே அவரின் உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படும்.

ஸ்ரீதேவியின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு  ஜூஹூ பகுதியில் நடைபெறுகிறது.  இறுதி சடங்கு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஜினி, பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ளனர். வர்ஷா என்ற பகுதியில்  உள்ள பாக்கியா பங்களாவில் ஸ்ரீதேவியின் உடல்  பார்வைக்காக வைக்கப்படுகிறது. அதற்கான  முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

ஸ்ரீதேவியின் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மும்பையில் இன்று இறுதி சடங்கு இன்று மாலை  நடக்கலாம் என கூறப்படுகிறது.  

ஸ்ரீதேவி மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் ஸ்ரீதேவி ஏற்று நடித்ததில் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றி குறிப்பிட்டு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்
 

Next Story