உதவியாளர்களுக்கு நடிகரே சம்பளம் வழங்க வேண்டும்-தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முடிவு


உதவியாளர்களுக்கு நடிகரே சம்பளம் வழங்க வேண்டும்-தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முடிவு
x
தினத்தந்தி 24 March 2018 11:00 PM GMT (Updated: 24 March 2018 9:05 PM GMT)

உதவியாளர்களுக்கு நடிகரே சம்பளம் வழங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம், ‘பிலிம்சேம்பர்’ கட்டிடத்தில் நடந்தது. கூட்டம் முடிந்தபின், ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் திரைப்பட துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் திரை துறை சார்ந்த சங்கங்களுடன் சினிமா துறையின் நலன் குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவாதித்து, அதை செய்வதற்கான முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்ற சங்கங்களுடன் சேர்ந்து எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில், இன்று தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சங்கத்துடன் திரைத்துறையின் நலனுக்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசித்தது. அதன் அடிப்படையில், நடிகர்களுடைய உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை மட்டும் வழங்குவது என்றும், அதற்கு மேல் நடிகர்கள் தங்களுடைய சொந்த செலவிலே வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் ஊதியம் வழங்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கு முதலாவதாக முன்வந்து நடிகர் சூர்யா அவருடைய உதவியாளர்களுக்கு அவரே முழு ஊதியமும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து நடிகர்கள் விஷால், கார்த்தி இருவரும் தாங்களும் தங்களின் உதவியாளர்கள் சம்பளத்தை தாங்களே வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பதினைந்து லட்சத்தில் இருந்து இருபது லட்சம் வரை தயாரிப்பு செலவில் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் தனது நன்றியை தெரிவித்தது.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story