சினிமா செய்திகள்

நடிகர் விஷால் மீது ராதாரவி, டி.ராஜேந்தர் புகார் + "||" + On actor Vishal Radharavi, T. Rajender complained

நடிகர் விஷால் மீது ராதாரவி, டி.ராஜேந்தர் புகார்

நடிகர் விஷால் மீது ராதாரவி, டி.ராஜேந்தர் புகார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் ராதாரவி, டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி, முருகன், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன், சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

“ஆரம்ப காலத்தில் அனைத்து மொழி நடிகர்களும் சென்னை ஸ்டுடியோக்களில் பணியாற்றினார்கள். அதன் பிறகு கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என்று சென்று விட்டனர். எனவே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்பதை தமிழ் திரைப்பட வர்த்தகசபை என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஆரம்பமாக இந்த கூட்டம் நடந்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

டைரக்டர் டி.ராஜேந்தர் கூறியதாவது:-

“தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த ரூ.7 கோடி என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை. திருட்டு இணையதளத்தை முடக்குவதாக பெருந்தொகையை செலவு செய்தும் அதை கட்டுப்படுத்தவில்லை. விஷால் தேர்தலில் ஜெயித்த போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இரும்புத்திரை படத்தை விதிமுறையை மீறி அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளனர்.

நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிட முடிவு எடுத்தது தவறானது. பொதுக்குழுவில் முடிவு எடுக்காமல் அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றி வாடகையாக பெரிய தொகையை செலவு செய்கிறார்கள். சினிமா டிஜிட்டல் மயமாகி விட்டதால் சங்க விதிகள் என்ற பெயரில் சிறுபட தயாரிப்பாளர்களை கட்டுப்படுத்தக்கூடாது”.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ராதாரவி கூறும்போது, “தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை மாற்ற முடிவு செய்துள்ளோம்” என்றார்.