சினிமா செய்திகள்

ஏழை மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும்‘‘தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்’’ –விஜய் சேதுபதி + "||" + I will continue producing quality films- Vijay Sethupathi

ஏழை மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும்‘‘தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்’’ –விஜய் சேதுபதி

ஏழை மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும்‘‘தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்’’ –விஜய் சேதுபதி
நல்ல படங்களை தொடர்ந்து தயாரிப்பேன் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.
நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து திரைக்கு வந்துள்ள படம், ‘மேற்கு தொடர்ச்சி மலை‘. லெனின் பாரதி டைரக்டு செய்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால், இதன் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியதாவது:–

‘‘பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்தபோது இயக்குனர் லெனின் என்னை சந்தித்து மேற்கு தொடர்ச்சி மலை படத்தை எடுப்பது குறித்து பேசினார். அப்போது எனக்கு ரூ.25 லட்சம்தான் சம்பளம். எனவே அதிகம் சம்பாதிக்கும்போது இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். அதன்படி படத்தை தயாரித்து இப்போது திரைக்கு கொண்டு வந்து இருக்கிறோம். படம் தயாரானதும் நான் பார்த்தேன். அப்போது எனக்கு திருப்தியான படமாக தெரியவில்லை. 

எனவே படத்தில் லாபத்தை எதிர்பார்க்காமல் சில லட்சங்களை குறைத்து விற்றுவிட முயன்றோம். அது நடக்கவில்லை. ஒருவர் படத்தை பார்த்து விட்டு, வாங்கிக்கொள்வதாக முன்பணம் கொடுத்தார். அவரும் திடீரென்று வேண்டாம் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று வாங்கிக்கொண்டார். இது எளிய மக்களுக்கான படம். பெட்டிக்குள் முடங்கி விடக்கூடாது என்று முடிவு எடுத்து திரைக்கு கொண்டு வந்து விட்டோம். 

படத்துக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பை பார்க்கும்போது, எனது கணிப்பு தவறு என்று புரிகிறது. நல்ல படங்களை மக்கள் கொண்டாடுவார்கள் என்று உணர்ந்துள்ளேன். கலை என்பது வியாபாரம் சார்ந்தது. ஏழை–எளிய மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இந்த தரமான படத்தை தயாரித்ததை பெருமையாக கருதுகிறேன். கலை என்பது  யாராலும் கணித்து சொல்ல முடியாத பெரிய உலகம். வியாபாரிகள் நம்பினால்தான் படத்தை திரைக்கு கொண்டு வர முடியும். 

இந்த படத்தை ஆரம்பத்தில் நம்பாத விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் இப்போது நம்புகிறார்கள். பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ள இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று கேட்கிறார்கள். ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். மனம் நிறைவாக இருக்கிறது. விருது கிடைக்காதது குறித்து வெளிப்படையாக பேசினால் சிலரை குறை சொல்ல வேண்டி வரும். குறை சொல்ல நான் விரும்பவில்லை. வாய்ப்பு அமைந்தால் தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்கள் தயாரிப்பேன்.‘‘

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

நிகழ்ச்சியில் நடிகர் ஆண்டனி, டைரக்டர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகியோரும் பேசினார்கள்.