தீவிபத்து ஏற்பட்ட ஸ்டூடியோவை விற்பதால் கலங்கிய கரீனா கபூர்


தீவிபத்து ஏற்பட்ட ஸ்டூடியோவை விற்பதால் கலங்கிய கரீனா கபூர்
x
தினத்தந்தி 28 Aug 2018 9:45 PM GMT (Updated: 28 Aug 2018 8:36 PM GMT)

இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம். இந்த குடும்பத்தை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கபூரால் 1948–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆர்.கே. ஸ்டூடியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.

இந்தியில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனைகள் நிகழ்த்திய பாபி, சத்யம் சிவம் சுந்தரம், ராம் தேரி கங்கா மெய்லி, மேரே நாம் ஜோக்கர் உள்பட நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன.

70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டூடியோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீவிபத்து ஏற்பட்டது. படப்பிடிப்பு அரங்குகள் எரிந்து நாசமாயின. அதன்பிறகு அங்கு படப்பிடிப்புகள் நடப்பது குறைந்து போனது. ஸ்டூடியோவை மீண்டும் சரிசெய்ய கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அதை விற்றுவிட கபூர் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இந்த ஸ்டூடியோ விற்பனைக்கு வருவதாக இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அந்த குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகை கரீனா கபூருக்கு வேதனையை அளித்துள்ளது. இவர் ராஜ்கபூரின் பேத்தியும் நடிகர் ரிஷிகபூரின் உடன்பிறந்த சகோதரரான ரந்தீர்கபூரின் மகளும் ஆவார். இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துள்ளார்.

கரீனா கபூர் கூறும்போது, ‘‘ஆர்.கே. ஸ்டூடியோ எனக்கு மிகவும் பிடித்தமான இடம். அந்த ஸ்டூடியோவுக்குள் சிறுவயதில் நான் விளையாடிய நினைவுகள் இன்னும் மனதில் இருக்கிறது. ஸ்டூடியோவை விற்க முடிவு செய்ததது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இது எனது குடும்பத்தினர் முடிவு என்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை’’ என்றார்.

Next Story