பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்


பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்
x
தினத்தந்தி 26 Oct 2018 11:00 PM GMT (Updated: 26 Oct 2018 5:24 PM GMT)

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக இருப்பவருக்கு மலையாள நடிகர் சங்கம் பாதுகாப்பு அளிப்பதாக ரீமா கல்லிங்கல் கூறியுள்ளார்.

கேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான தீலிப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைத்தனர். ஆனால் மோகன்லால் சங்கத்துக்கு தலைவரானதும் மீண்டும் அவரை சேர்த்து கொண்டார். இதனை நடிகைகள் எதிர்த்தனர்.

திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து சில நடிகைகள், நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார்கள். இதனால் திலீப்பிடம் ராஜினாமா பெற்று மீண்டும் அவரை நீக்கி விட்டனர். ராஜினாமா செய்த நடிகைகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று மோகன்லால் அறிவித்து உள்ளார்.

தமிழில் ‘யுவன் யுவதி’ படத்தில் கதாநாயகியாக நடித்து மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரீமா கல்லிங்கலும் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் நடிகர் சங்கத்தில் சேருவீர்களா? என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

“நான் இப்போது மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. இனிமேல் அந்த சங்கத்தில் சேரவும் மாட்டேன். பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக இருப்பவருக்கு மலையாள நடிகர் சங்கம் பாதுகாப்பு அளிக்கிறது. அந்த சங்கத்தில் நான் எதற்காக சேரவேண்டும்? நடிகைகள் நலனுக்காகவா அது செயல்படுகிறது? என்னை நான் பார்த்துக்கொள்வேன்.

சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கிய நடிகர்கள் நலனுக்காகவே செயல்படுகிறது. சங்கத்தில் இல்லாமலேயே பலர் சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து செயல்படுவேன்.”

இவ்வாறு ரீமா கல்லிங்கல் கூறினார்.

Next Story