கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு?


கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு?
x
தினத்தந்தி 13 Nov 2018 11:45 PM GMT (Updated: 14 Nov 2018 12:24 AM GMT)

கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் இந்தியன். 1996-ல் வெளியான இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருவை கொண்டது.

கமல்ஹாசன் இளமையாகவும், வயதான இந்தியன் தாத்தாவாகவும் இரு வேடங்களில் வந்தார். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேர்வாகவில்லை. என்றாலும் 3 தேசிய விருதுகளை வென்றது. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இந்த படத்தில் கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் சுபாஷ் சந்திரபோசை மையமாக வைத்து உருவாக்கியதாக கூறப்பட்டது. லஞ்ச ஊழல் பேர்வழிகளை இந்தியன் தாத்தாவாக வரும் கமல் கைவிரல்களை சுழற்றி வர்ம அடி கொடுத்து வீழ்த்தும் காட்சிகளுக்கு தியேட்டர்களில் விசில் பறந்தது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல். துல்கர் சல்மானும் நடிக்கிறார். நடிகர் சிம்புவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேசி வருகிறார்கள்.

இந்தியன் கிளைமாக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள். ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.

Next Story