‘‘சினிமா துறைக்கு 2.0 பெருமை ஏற்படுத்தும்’’ பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு


‘‘சினிமா  துறைக்கு  2.0  பெருமை  ஏற்படுத்தும்’’ பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 28 Nov 2018 12:00 AM GMT (Updated: 27 Nov 2018 5:54 PM GMT)

‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நாளை திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களை சந்தித்தனர்.

ரஜினிகாந்த் அப்போது பேசியதாவது:–

தெலுங்கு மக்கள் நல்லவர்கள். அவர்களை எல்லோரும் விரும்புவார்கள். தெலுங்கு உணவு உலக பிரசித்தமானது. தெலுங்கு இசை ஆனந்தமயமானது. தெலுங்கின் பெருமையை மகாகவி பாரதியாரே பாராட்டி இருக்கிறார். எந்திரன் படம் எடுத்தபோது முழு படத்தையும் 3டியில் மாற்ற முயன்றோம். ஆனால் முடியவில்லை.

2.0 படம் 3டியில் வருகிறது. படத்தின் கதையை ‌ஷங்கர் சொன்னதும் இதை படமாக அவரால் எடுக்க முடியுமா? என்று சந்தேகம் எழவில்லை. அவரால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பாகுபலி படத்தில் கதையும் பிரமாண்டமும் இருந்ததால் உலக அளவில் பேசப்பட்டு வெற்றி பெற்றது.

அதுபோல் 2.0 படமும் புதிய தொழில் நுட்பத்தில் பேசப்படும் படமாக இருக்கும். இது 100 சதவீதம் பெரிய வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறேன். 2.0 படத்தை நான் பார்த்த பிறகு மக்களே இந்த படத்தை விளம்பரப்படுத்துவார்கள் என்றேன். அந்த அளவுக்கு படத்தில் வி‌ஷயங்கள் இருக்கிறது.

1975–ல் நான் நடித்த முதல் படமான அபூர்வராகங்கள் வெளியானபோது அதை பார்க்க எனக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ 43 வருடங்களுக்கு பிறகு 2.0 படத்துக்காக அதே ஆர்வத்தோடு இருக்கிறேன். படத்தில் 45 சதவீதம் விஷுவல் எபெக்ட் உள்ளது. பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளும் உள்ளன.

டிரெய்லர், பாடல்கள் சாம்பிள்தான். 2.0 படம் ரசிகர்களை அதிசயிக்க வைக்கும். ஆச்சரியம் ஏற்படுத்தும். சினிமா துறைக்கே பெருமை ஏற்படுத்தும் படமாக இருக்கும். சினிமாவில் எனது அடுத்த அவதாரம் பேட்ட படம்.’’

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Next Story