புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 500 பசுக்கன்றுகள் வழங்கிய ஜி.வி.பிரகாஷ்


புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 500 பசுக்கன்றுகள் வழங்கிய ஜி.வி.பிரகாஷ்
x
தினத்தந்தி 2 Dec 2018 11:15 PM GMT (Updated: 2 Dec 2018 10:41 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 500 பசுக்கன்றுகளை ஜி.வி.பிரகாஷ் வழங்கினார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் புயலால் பாதித்த டெல்டா மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார். கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புயலால் வீடு, உடைமைகளை இழந்த பெண்கள் 500 பேருக்கு பசுக்கன்றுகளையும் வழங்கினார்.

அப்போது ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது:-

“விவசாய பெருமக்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக 500 பசுக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்துக்கான முதல் படியாக பசுக்கன்றுகள் உதவும். தன்னார்வலர்கள் விவசாயத்திற்குரிய மரக்கன்றுகள், சாகுபடிக்கான செலவுகள், கால்நடைகள் வாங்கி தந்தால் அவர்களுக்கு பயம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.

மத்திய, மாநில அரசுகள் வேகமாக தங்களது பணிகளை முடுக்கி விட வேண்டும். மின்சார பாதிப்பால் கிராமங்கள் இருண்டு கிடக்கிறது. விரைவில் அவர்கள் வெளிச்சத்தை பார்க்க வேண்டும். 500 பசுக்கன்றுகள் என்பது சாதாரண விஷயமல்ல. இதை பல்வேறு இடங்களில் கலப்பை மக்கள் இயக்கத்தினர் சேகரித்து தந்துள்ளனர் என்று அவர் பேசினார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு அய்யப்பந்தாங்கலில் உள்ள குடியிருப்போர் சங்கம் சார்பில் போர்வைகள், அரிசி, சோப்பு, கொசுவலை உள்பட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தார்.


Next Story