2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரசுடன் கூட்டணி? ராமநாதபுரத்தில் போட்டி? -கமல்ஹாசன் திட்டம்


2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரசுடன் கூட்டணி?  ராமநாதபுரத்தில் போட்டி? -கமல்ஹாசன் திட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2018 5:23 AM GMT (Updated: 25 Dec 2018 5:23 AM GMT)

2019 பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி வைத்து கமல்ஹாசன் ராமநாதபுரத்தில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான அணியை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், கூட்டணி அமைத்து போட்டியிடுவரா அல்லது தனித்து போட்டி யிடுவாரா என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று முன்தினம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தபோது கூட்டணி குறித்து முடிவு எடுக்க கட்சி முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றியது.  பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் "ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்" என்று அறிவித்தார். மேலும்  நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதே  நேரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு "தமிழகத்தின் மரபணுவை மாற்ற நினைக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்" என்று தெரிவித்தார். எனவே, காங்கிரஸுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியவுடன் கமல்ஹாசன் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார். ஆரம்பம் முதலே காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கத்தை காட்டி வருகிறார். 

இந்தநிலையில், காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

கமல்ஹாசன் ஓய்வு எடுப்பதற்காக  சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு கூட்டணி  உறுதி செய்யப்பட்டு, முழு வடிவம் பெறும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்  இல்லை.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தாலும் திமுக காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் உள்பங்கீடு பெற்றுக்கொண்டு காங்கிரசோடு மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் தனக்கு ராமநாதபுரம் தொகுதியில் சீட் வேண்டும் எனவும் காங்கிரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

கமல்ஹாசனின் சொந்த ஊர் என்பதால் அங்கு அவருக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்கும் என்பதால் காங்கிரசும் இந்த முடிவுக்கு தலையசைத்து விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story