நடிகர்கள் இப்போது தப்பு செய்ய தயங்குகிறார்கள் - ராதிகா ஆப்தே அதிரடி


நடிகர்கள் இப்போது தப்பு செய்ய தயங்குகிறார்கள் - ராதிகா ஆப்தே அதிரடி
x
தினத்தந்தி 31 March 2019 4:30 AM GMT (Updated: 30 March 2019 8:38 AM GMT)

‘சிந்திக்கும் ஆற்றல் நிறைந்த சிறந்த நடிகை’ என்ற பெயரை பெற்றிருக்கிறார், ராதிகா ஆப்தே. அதுவே அவருக்குத் தனி அடையாளத்தை ஏற் படுத்திக் கொடுத்திருக்கிறது.

மொழிகளைக் கடந்து தனது அர்த்தமுள்ள நடிப்பால் முத்திரை பதிக்கும் ராதிகா ஆப்தே, ஒரே நேரத்தில் சினிமாவிலும் நடிக்கிறார். வெப் தொடர்களிலும் தோன்றுகிறார். அவரது பேட்டி:

இந்திய சினிமா தற்போது உன்னத நிலையில் இருக்கிறது என்று கூறலாமா?

இந்திய சினிமா உன்னதமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட உயர்ந்த நிலை இனிமேல்தான் வரப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் சில அற்புதமான திரைப்படங்கள் வெளிவரும். மகத்தான பல படங்கள் தயாரிக்கப்பட்ட காலத்துக்குப் பின்பு ஒரு தொய்வு நிலை ஏற்பட்டிருந்தது. தற்போதைய சினிமாக்களில் நல்ல திரைக்கதை இருக்கிறது. இது 25 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்டுள்ள சிறந்த மாற்றம். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய ரசிகர்கள் எல்லாவிதமான படங்களையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று கூறலாமா?

நல்ல படங்களை ரசிகர்கள் ஏற்காவிட்டால், அதுபோன்ற படங்களை தொடர்ந்து தயாரிக்க மாட்டார்கள். நல்ல சினிமாவில் காசு போட யாரும் முன்வர மாட்டார்கள். பலரும் ‘ரிஸ்க்’ எடுத்து புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு, ரசிகர்கள் அதை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கைதான் காரணமாக இருக்கிறது. ஒரே கதையை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இன்றைய ரசிகர்கள் வித்தியாசத்தை விரும்புகிறார்கள்.

வெளிநாட்டுப் படங்களை ரசிகர்கள் நிறைய பார்ப்பதுதான் அவர்களது வித்தியாசமான ரசனைக்கு காரணமா?

இருக்கலாம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலக சினிமாவைக் காணும் வாய்ப்பு சாதாரண ரசிகர்களுக்கும் கிடைத்திருக்கிறது. இந்திய ரசிகர்களுக்கு ஒரு புதிய உலகம் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

பெண்களை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் வெற்றி, நடிகைகள், அவர்கள் திறமை குறித்து திரைத்துறை கொண்டிருந்த கருத்தை மாற்றியிருக்கிறதா?

இன்னும் நடிகைகளுக்கு சமமான அல்லது போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இங்கே இன்னும் நிறைய மாற்றம் வர வேண்டும். அதே நேரம், நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதையும் உணர் கிறேன். என்னைப் பொறுத்தவரை, நான் நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களுமே பிரதானமானவைதான், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டவைதான்.

ஆனால் சினிமாவில் சம்பள விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது?

சினிமாவில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே பெரிய அளவில் சம்பள வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாக்கள்தான் வசூலைக் குவிக்கிறது. அதுவே அவர் களது சம்பள உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு நீங்கள் நடித்த இந்திப் படம் அந்தாதுன் வெற்றி பெற்றது. அதேநேரம் பல பெரிய நட்சத்திரங் களின் படங்கள் தோல்வியைத் தழுவின. அதைவைத்து பார்க்கும்போது, தற்போது ‘ஸ்டார் வேல்யூ’ என்பது மதிப்பிழக்கத் தொடங்கிவிட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?

எல்லாவற்றிலும் நாம் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது என்று எண்ணிவிடவும் கூடாது. இன்றைக்கும் ‘ஸ்டார் வேல்யூ’ என்பதற்கு ஒரு மதிப்பு இருக்கவே செய்கிறது. ஒரு படத்தில் நட்சத்திரங்கள் நிறைந்திருந்தால், அதற்கு நல்ல ‘ஓபனிங்’ இருக்கும். அதேநேரம், மோசமான கதை அமைப்பு இருந்தால் நாம் தப்பிக்க முடியாது. ஒரு படத்தில் புதிதாக எதுவும் இல்லாவிட்டால், அதில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ஓடாது. நல்ல உள்ளடக்கம், வாய் வழிப் பிரச் சாரம் காரணமாகவே சிறுபடங்கள் ஓடுகின்றன. ஆனால் ‘ஸ்டார் வேல்யூ’ என்பது ஒரேயடியாக முடிந்துவிடாது. எல்லா சிறுபடங்களும் வெற்றி பெறும் என்று கருதிவிடவும் முடியாது. குறிப்பிட்ட சில அம்சங்கள் இருந்தால்தான் ஒரு படம் வெற்றி பெறும். நாம் ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, சூழல் மாறிவிட்டது என்று கூற முடியாது. ஒரு நீண்ட காலகட்டத்திற்கு பிறகுதான் உண்மை நிலை தெரியவரும்.

திரைத்துறையில் இதுவரை யிலான உங்கள் பயணத்தை திரும்பிப் பார்க்கையில் என்ன தோன்றுகிறது?

நான் திரும்பிப் பார்ப்பதில்லை. உண்மையாகவே அப்படிச் செய்வதில்லை. இப்போதைக்கு, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றுதான் நான் பார்க்கிறேன். நான் நடித்த படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 2018 சிறந்த வருடம். அவை எல்லாமே வெற்றியும் பெற்றன. நான் இப்போது எனக்கான சிறந்த கதாபாத்திரங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்”

தற்போது புகழ் பெற்றுவரும், வெப் தொடர்களுக்கு ‘சென்சார்’ அவசியம் என்று நினைக்கிறீர்களா?

வெப் தொடர்களுக்கு எந்த ‘சென்சார்ஷிப்’பும் கூடாது என்றே நான் கருதுகிறேன். அதற்கு என்ன காரணம் என்றால், மக்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அதை எப்படியாவது பார்க்கத்தான் போகிறார்கள்.


Next Story