வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நரேந்திர மோடி படத்தை வெளியிட முடிவு


வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நரேந்திர மோடி படத்தை வெளியிட முடிவு
x
தினத்தந்தி 3 May 2019 10:15 PM GMT (Updated: 3 May 2019 5:54 PM GMT)

நரேந்திரமோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். திரைப்படத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை கதை ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி உள்ளது. நரேந்திரமோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். திரைப்படத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து ஆதாயத்துக்காக இந்த திரைப்படத்தை எடுத்துள்ளதாகவும், எனவே தேர்தல் நேரத்தில் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நரேந்திரமோடி திரைப்படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்த்து தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா? என்று கோர்ட்டில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து, படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டு, சீலிட்ட உறையை கடந்த 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி தேர்தல் முடியும் வரை படத்தை திரையிட கோர்ட்டு தடை விதித்தது.

இந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, வருகிற 24-ந்தேதி படத்தை வெளியிட முடிவு செய்து இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Next Story