தனது பாடல்களை படங்களில் பயன்படுத்த எதிர்ப்பு: இளையராஜாவுக்கு சீனுராமசாமி, கஸ்தூரி பதில்


தனது பாடல்களை படங்களில் பயன்படுத்த எதிர்ப்பு: இளையராஜாவுக்கு சீனுராமசாமி, கஸ்தூரி பதில்
x
தினத்தந்தி 29 May 2019 10:45 PM GMT (Updated: 29 May 2019 7:28 PM GMT)

தனது பாடல்களை படங்களில் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த இளையராஜாவுக்கு, சீனுராமசாமி, கஸ்தூரி ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.


தனது பாடல்களை அனுமதி இல்லாமல் கச்சேரிகளில் பாட இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீசும் அனுப்பினார். சமீப காலமாக சில படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

விஜய் சேதுபதி, திரிஷா நடித்து திரைக்கு வந்த 96 படத்திலும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்று இருந்தன. இதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து கூறும்போது, “இப்போதைய படங்களில் எனது பாடல்களை பயன்படுத்துவது தவறு. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனத்தை காட்டுகிறது” என்றார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சீனுராமசாமி, இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.

“80, 90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது. தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவரது பாடல்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 96 படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்தியிருப்பார்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி கூறும்போது, “இளையராஜா இசையால் மட்டும் உரையாட வேண்டும். மடியும் எண்ணத்தில் இருந்த என் மனதை இசையால் மாற்றி, மறுவாழ்வு தந்த இசைக்கடவுள் இளையராஜா, கடவுளை கேள்வி கேட்க வேண்டாமே” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story