சினிமா செய்திகள்

காதல் சோகத்தில் இருந்து மீண்ட கத்ரீனாவின் நினைவலைகள்.. + "||" + Katrina's memories come from love tragedy

காதல் சோகத்தில் இருந்து மீண்ட கத்ரீனாவின் நினைவலைகள்..

காதல் சோகத்தில் இருந்து மீண்ட கத்ரீனாவின் நினைவலைகள்..
கத்ரீனா கைப்பும் ரண்பீர் கபூரும் பிரிந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன
இந்தி திரை வானில் காதல் புறாக்களாக சிறகடித்த கத்ரீனா கைப்பும் ரண்பீர் கபூரும் பிரிந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்கப்புறம் பல விஷயங்கள் நடந்துவிட்டன. ரண்பீர் தனது புதிய காதல் துணையாக அலியா பட்டை தேர்ந்தெடுத்தார் என்றால், கத்ரீனா சினிமாவில் மூழ்கிவிட்டார். பிரிவு குறித்து இவ்வளவு காலம் பேசாமல் இருந்த கத்ரீனா, சமீபத்திய பேட்டியில் அது பற்றி மனம் திறந்திருக்கிறார்.

‘‘சில விஷயங்கள் ஏன் நடந்தன என்று புரிந்துகொள்வது கடினம். ஆனால் அவை தொடர்பாக எனது பார்வை வேறுபட்டது. பிரிவு என்பது மோசம்தான், பயங்கரம்தான், கடுமையாகப் பாதிக்கக்கூடியதுதான், வாழ்வே முடிந்துவிட்ட உணர்வைத் தரக்கூடியதுதான். அந்த நேரத்தில் ஆறஅமர உட்கார்ந்து யோசித்தாலும் நல்லதாக எதுவும் தோன்றாது. ஆனாலும் கடவுள் மீதும், பிரபஞ்சத்தின் மீதும் நம்பிக்கை வைத்தால், நாம் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டுவிடலாம்’’ என்று அமைதியான குரலில் கூறுகிறார்.

பிரிவின் வலியில் இருந்து மீண்டு வர தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அதேநேரம், அது நல்ல அனுபவத்தை தந்ததாகவும் கத்ரீனா கூறுகிறார்.

‘‘நான் இதைப் பற்றி வெளிப்படையாகக் கூறுவதற்குக் காரணம், யாராவது இளம்பெண்கள் இதைப் படிக்கலாம். அவர்களும் பிரிவைச் சந்தித்தவர்கள் என்றால், அவர்களுக்கு எனது அனுபவம் உதவலாம். நான் ஒருவரைப் பார்த்து, ‘அவருக்கு என்ன... எல்லா வசதிகளும் இருக்கு’ என்றோ, ‘அவர் என்னைப் போல கஷ்டப்படவில்லை’ என்றோ நினைக்கலாம். ஆனால் பூமியில் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் கஷ்டப்படு கிறார்கள் என்பதுதான் உண்மை. எல்லாவற்றிலும் முக்கியமான விஷயம், கற்றுக்கொள்வது. நமது பயங்கள், கவலை களைத் தாண்டி நாம் எல்லோருமே வேலை பார்க்கவும், சாதிக்கவும்தான் முயல்கிறோம். எல்லா கஷ்டங்களையும் தாண்டி நாம் ஓடிக்கொண்டேதானே இருக்க வேண்டும்’’ என்கிறார்.

‘‘பிரிவுக்குப் பின் நான் மனரீதியாக மிகவும் பலவீனமாக இருந்தபோது, எனது தாயார் ஒரு விஷயத்தை சொன்னார். அதாவது, ‘உன்னைப் போன்ற மனக்கஷ்டத்தை பல இளம்பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ நீ மட்டும்தான் கஷ்டப்படுவதைப் போல நினைத்துக்கொண்டிருக்கிறாய். அதனால் உண்மையை உணர்ந்துகொண்டு தைரியமாக இரு..’ என்றார் அம்மா. அவரது அந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தன’’

தான் எப்போதுமே உணர்வுபூர்வமானவள் என்றும், யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் கத்ரீனா கூறுகிறார்...

‘‘நான் உணர்வுபூர்வமானவள். உள்ளுணர்வு மிக்க ஆத்மாவை கொண்டவள். அதை நான் இழக்கவோ, யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவோ போவதில்லை. ஆனால் பிரிவு அனுபவத்தில் இருந்து நான், ஒரு பெண்ணாக எனது அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பராமரிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன். சுயமரியாதை என்பது நமக்குள் இருந்துதான் வர வேண்டும். அதை அடுத்தவர்களால் கொடுக்க இயலாது. நாம் இந்த உலகத்துக்கு தனியாக வந்தோம், தனியாகத்தான் போகப் போகிறோம். அதை நாம் மறந்துவிடவே கூடாது’’ என்று சொல்லும் கத்ரீனா, தற்போது காதலில் இருப்பவர்களுக்கும் தனது அனுபவ ஆலோசனையை தருகிறார்.

‘‘காதலில் பெண்கள் எப்போதும் விழிப்போடு தற்காப்பு உணர்வோடு இருக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. நீங்கள் மனந் திறந்து காதலியுங்கள். உங்கள் ஜோடி மீது அன்பை அள்ளிக் கொட்டுங்கள். ஆனால் ஒருபோதும் உங்கள் தனித்துவத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள்’’ என்கிறார்.

பிரிவுக்குப் பின் கத்ரீனாவும்- ரண்பீரும் பார்த்துக்கொள்ளவில்லை. ஆனால் யார் மீதும் கசப்பைச் சுமந்து திரிவதில் அர்த்தமில்லை என கத்ரீனா கருதுகிறார்.

‘‘நம்மை காதலித்துவிட்டு பிரிந்துபோனவர் யாராக இருந்தாலும், அவரைப் பற்றிய பழைய கசப்பான எண்ணங்களை நாம் சுமந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். யாரும் எனக்கு வலியைத் தர வலிந்து முயற்சிக்கிறார்கள் என்று நான் கருதவில்லை. எல்லோருமே நமக்கு நல்லது செய்யத்தான் முயல்கிறார்கள். ஆனால் அதிலும் சிலவேளைகளில் நாம் காயப்பட்டு விடுகிறோம். ஒருவரை எதிரியாகக் கருதுவதை விட நண்பராக நினைப்பதே நல்லது’’ என்று தத்துவார்த்தமாகக் கூறு கிறார்.

திரைப்பட வாழ்வைப் பொறுத்தவரை, கத்ரீனா கடைசியாக ஷாருக்கானுடன் நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தபோதிலும், அதில் நடிப்புக்காக கத்ரீனா பாராட்டப்பட்டார்.

அடுத்ததாக, வருகிற 5-ம் தேதி வெளியாகிற, சல்மானின் ஜோடியாக நடித் திருக்கிற ‘பாரத்’ படத்தை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார் கத்ரீனா.

இந்தப் படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், முதலில் தனது படத்தில் சல்மானுக்கு பிரியங்கா சோப்ராவைத்தான் ஜோடியாக்க நினைத்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, கத்ரீனாவை தேர்வு செய்தார். இரண்டாவது சாய்ஸ் ஆகத்தான் தான் தேர்ந் தெடுக்கப்பட்டேன் என்றாலும், அதில் தனக்கு வருத்தமில்லை என்கிறார் கத்ரீனா.

மேலும், ‘‘பாரத் படத்தில் நடிப்பதால் இப்போது எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த கதாபாத்திரமே எனக்குள் அத்தகைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. அலி அப்பாஸ் எனக்குப் பல சுவாரசியமான பாத்திரங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவரது ‘ஜீரோ’, ‘பாரத்’ படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலிதான்.

ஷாருக், சல்மான் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது அந்தப் படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் பெரிதாக இருக்கும். இயக்குனர், நடிகர், நடிகைகள் முதற்கொண்டு அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அந்த அழுத்தத்தை உணர்வார்கள். எப்போதுமே நாம் பணியாற்றிய படம் பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று விரும்புவோம். அந்த வெற்றியைத்தான் நான் பெரிதாக கருதிக்கொண்டிருக்கிறேன்” என்று நிதானமாக சொல்கிறார், கத்ரீனா கைப்.


ஆசிரியரின் தேர்வுகள்...