மென் இன் பிளாக்: இண்டர்நேஷனல்


மென் இன் பிளாக்: இண்டர்நேஷனல்
x
தினத்தந்தி 8 Jun 2019 4:05 PM GMT (Updated: 8 Jun 2019 4:05 PM GMT)

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற படவரிசையில் மென் இன் பிளாக் (எம்ஐபி) வரிசை படங்கள் முக்கிய இடம் வகிப்பவை (பெயர் பெரியதாக இருப்பதால் எம்ஐபி என்றே வைத்துக் கொள்வோம்).

எம்ஐபி வரிசை படங்கள் இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்தவாரம் இந்த வரிசையின் நான்காவது பாகமான எம்ஐபி: இண்டர்நேஷனல் வெளியாக உள்ளது. எம்ஐபி வரிசைப் படங்கள் மார்வெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ‘மலிபு’ காமிக்ஸ் நிறுவனத்தின் மென் இன் பிளாக் காமிக்ஸ் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பவை.

எம்ஐபி 1,2,3 என 1997, 2002, 2012 ஆகிய ஆண்டுகளில் வெளியான முதல் மூன்று எம்ஐபி படங்களை இயக்கியவர் பேரி சொனென்ப்பெல்ட். முதல் மூன்று பாகங்களிலும் வில் ஸ்மித் ஏஜென்ட் ஜே ஆகவும், டாமி லீ ஜோன்ஸ் ஏஜென்ட் கே ஆகவும் நடித்திருந்தனர். எம்ஐபி 3-வது பாகத்தில் ஜோஸ் ப்ரோலின் ஏஜென்ட் கே-வின் இளவயது தோற்றத்தில் நடித்திருந்தார்.

எம்ஐபி வரிசை படங்களின் என்றாலே வித்தியாசமான கதைக்களம், கிட்டத்தட்ட ஏலியன்களுக்கான போலீஸ் போன்ற கதைக்களம். அதிநவீன வாகனம், அட்டகாசமான ஆயுதம், எவரும் அறிய முடியாத அவர்களின் ரகசிய இடம் என்று காட்சிக்கு காட்சி கண்களுக்கு விருந்தளிப்பவை. இவையே அந்த படத்தின் பலமாக திகழ்கின்றன. இதனால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு மக்களையும் தனக்கான ரசிகர்களாக கொண்டிருக்கிறது எம்ஐபி.

பூமியில் உலவித்திரியும் ஏலியன்களால் மக்களுக்கு பிரச்சினை நேராமல் பார்த்துக்கொள்ளும் முக்கியமான வேலையை செய்வது தான் எம்ஐபி. இவர்கள் சிஐஏ, எப்பிஐ ஆகியவற்றை விட திறமையும் பலமும் வாய்ந்தவர்கள் என்பது இந்த படங்களை பார்த்தவர்கள் அறிந்திருப்பர்.

அவெஞ்சர்ஸ் படங்களின் மூலம் உலகறிந்த தோர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘கிரிஸ் ஹோம்ஸ்வொர்த்’ இந்த எம்ஐபி படத்தில் ஏஜென்ட் ஹெச் ஆக நடித்திருக்கிறார். தோர் ரேங்னராக் படத்தில் வல்கைரியாக நடித்திருந்த ‘டெஸா தாம்ப்ஸன்’ ஏஜென்ட் எம் ஆக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ‘லியாம் நெஸன்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வில் ஸ்மித் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான எம்ஐபி படத்திற்கும் தற்போது வெளியாக உள்ள எம்ஐபி:இண்டர்நேஷனல் படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அதாவது முதல் எம்ஐபி படத்தில் வில் ஸ்மித் எம்ஐபி-யில் இணைய முயற்சிப்பார். அதே போல இந்த படத்தில் டெஸா முயற்சிக்கிறார். மேலும் இந்த படத்தில் லியாம் நெஸன் வில்லனாக இருக்கலாம் என்ற கருத்து இணையத்தில் உலா வருகின்றது. எம்ஐபி-யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரே வில்லனாக இருந்தால்...படத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

வழக்கமாக ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் உலகை அச்சுறுத்தும் காரணிகளை எதிர்த்து ஹீரோ தரப்பினர் போராடி உலகை காப்பாற்றுவது போல் கதை இருக்கும். ஆனால் காட்சி என்னவோ நியூயார்க்கை சுற்றியே நகரும். அதனால் பிற நாட்டவர்க்கு இதென்னடா பித்தலாட்டமா இருக்கு என்பது போலத்தான் இருக்கும். அவர்களால் கதையுடன் முழுமையாக ஒன்றவும் முடியாது. ஆனால் இந்த எம்ஐபி: இண்டர்நேஷனல் படத்தில் ஹாலிவுட் படங்களின் வழக்கத்திற்கு மாறாக இவர்கள் ஏலியன்களை வேட்டையாட பளபளக்கும் நகரம், பாலைவனம் என்று உலகின் பல பகுதிகளை சுற்றி வருகின்றனர். இது டிரைலரின் சில காட்சிகளிலேயே புலப்படும். எனவே இந்த படம் உண்மையிலேயே உலகை காக்க புறப்பட்ட சூப்பர் அணியினரின் கதையாக இருக்கும்.

இதுவரை வந்த எம்ஐபி படங்களின் 3 பாகங்களிலும் ஒரே நடிகர்களே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதனால் ரசிகர்களுக்கு எம்ஐபி என்றாலே அவர்களின் முகம் தான் கண்முன் வரும். கிரிஸ் ஹோம்ஸ்வொர்தை தோர் ஆகவே பார்த்து பழக்கப்பட்ட பலருக்கு அவரை ஒரு எம்ஐபி ஏஜென்ட்டாக ஏற்றுக்கொள்வது சற்று கடினமாகத் தான் இருக்கும். எம்ஐபி வரிசை படத்தின் அடுத்த பாகம் வருவதும் இந்த கூட்டணி தொடருவதும் இந்த பாகத்தின் வெற்றியைப் பொறுத்தே அமையும்.

மேலும் இந்த படத்தில் எம்ஐபி வரிசையில் இல்லாத பல புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். முந்தைய எம்ஐபி படங்களில் குறும்பும் அட்டூழியமும் செய்த சில ஏலியன்களைத் தவிர. அடுத்தவாரம் வெளியாகஉள்ள மென் இன் பிளாக்: இண்டர்நேஷனல் படத்தை இயக்கி இருப்பவர் ‘எப். கேரி கேரி’. இவர் பேட் ஆப் பியூரியஸ், இட்டாலியன் ஜாப் போன்ற பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story