சினிமா செய்திகள்

வைராக்கியம் வைத்தவன் கெட்டுப்போனதில்லை + "||" + The zealous man did not perish

வைராக்கியம் வைத்தவன் கெட்டுப்போனதில்லை

வைராக்கியம் வைத்தவன் கெட்டுப்போனதில்லை
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவர், திருவாரூர் தங்கராசு. நல்ல மனிதர், சிறந்த பண்பாளர், அற்புதமான எழுத்தாளர். இவர் எழுதி எம்.ஆர்.ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ இன்று வரை தமிழ் திரையுலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஒருமுறை நண்பரான நடிகர் விவேக், “திருவாரூர் தங்கராசுவை பேட்டி எடுக்க வேண்டும்” என்று கூறினார். அதனால் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்று அனுமதி வாங்கி வந்தேன். பிறகு விவேக், இரண்டு நாட்கள் அவரை பேட்டி கண்டார். பேட்டியின் போது நானும் உடன் இருந்தேன்.

அப்போது திருவாரூர் தங்கராசு என்னைப் பார்த்து “வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லைங்கிறதுக்கு, உன்னோட அப்பா ஒரு நல்ல உதாரணம்” என்றார்.

விவேக்கின் பேட்டிக்கு அது சம்பந்தம் இல்லாத ஒன்று என்பதால், அது பற்றி நான் மேலும் கேட்கவில்லை. விவேக் பேட்டி முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் திருவாரூர் தங்கராசு வீட்டிற்கு சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது அவரிடம், “அய்யா! அன்று நீங்கள் ‘வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லைங்கிறதுக்கு, உன்னோட அப்பா ஒரு நல்ல உதாரணம்’ என்று சொன்னீர்கள். அது என்னன்னு சொல்ல முடியுமா?” என்றேன்.

80 வயதை கடந்திருந்தாலும் ஒரு 20 வயது இளைஞனின் கம்பீரக்குரலுடன் அவர் பேசத்தொடங்கினார்.

“நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், எனக்கு நல்ல நண்பர். அந்த காலத்தில நேஷனல் பிக்சர்ஸ் அலுவலகம் தி.நகர், பர்கிட் சாலையில் இருந்த ஒரு பங்களாவில இருந்திச்சு. அங்கதான் ‘பராசக்தி’ படத்தை ஆரம்பிச்சாங்க. அது பாவலர் பாலசுந்தரத்தோட நாடகம். அதை சினிமா படமா எடுக்க முடிவு செய்து, அந்த நாடகத்தை விலைக்கு வாங்கி, சினிமாவுக்கான மாற்றங்களை செஞ்சோம். ‘பராசக்தி’ படத்துக்கு நான்தான் வசனகர்த்தா.

தினமும் காலையில் இருந்து உட்கார்ந்து பேசி, ஒரு காட்சியை சினிமாவுக்கு ஏத்த மாதிரி மாற்றம் செஞ்சு, அதுக்கு வசனம் எழுதித் தருவேன். மறுநாள் டைரக்டர் பஞ்சு வந்து, ஒரு ஆங்கிலப்படத்தில் இடம் பெற்ற காட்சியை சொல்லி, அந்த மாதிரி காட்சியை மாற்றணும்னு சொல்லுவாரு. நானும் ‘சரி’ன்னு மாத்தி கொடுப்பேன். இது ஒரு தடவைனா பரவாயில்லை. தினமும் ஒரு ஆங்கிலப்படத்தில் வந்த காட்சியை சொல்லி மாத்தித் தர சொல்லுவாரு.

ஒரு கட்டத்தில எனக்கு கோவம் வந்திடுச்சு. “இங்கிலீஷ் படத்துல வர காட்சியையும், வசனத்தையும் எழுத திருவாரூர் தங்கராசு எதுக்கு? வேற யாரை வேணும்னாலும் வச்சு எழுதிக்கோங்க”ன்னு சொல்லிட்டு வந்திட்டேன். அதுக்கு அப்புறம்தான் கருணாநிதியை வசனம் எழுத ஒப்பந்தம் செஞ்சாங்க.

பெருமாள் முதலியார், எனக்கு நல்ல நண்பர். எனக்கு பிரச்சினை இயக்குனரோடு தானே தவிர அவரோடு இல்லை. அதனால கருணாநிதி வசனம் எழுதினாலும், நான் அப்பப்ப அந்த ஆபீசுக்கு போய் பெருமாள் முதலியாரோட பேசிக்கிட்டு இருப்பேன்.

கருணாநிதி வரும்போது சில சமயம் உங்க அப்பாவும் கூட வருவாரு. அப்ப அவர் ஒரு சில பாடல்கள் எழுதி இருந்தாலும், அவர் அவ்வளவு பிரபலமாகாத நேரம். அப்பதான் அவர் எனக்கு பழக்கம் ஆனார்.

ஒரு நாள் நேஷனல் பிக்சர்ஸ் அலுவலகத்தில் பெருமாள் முதலியார், நான், கருணாநிதி, கிருஷ்ணன்-பஞ்சு, சிவாஜிகணேசன், கண்ணதாசன் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம்.

படத்துக்கான பாடல் பதிவு பற்றி பேச்சு வந்தது.

பெருமாள் முதலியார் கிட்ட உங்கப்பா “இந்தப் படத்துக்கு நானும் பாட்டு எழுதவா?” என்று கேட்டார்.

“பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா?” என்று பட்டென்று சொல்லிவிட்டார் பெருமாள் முதலியார்.

அப்புறம் அது பற்றி உன் அப்பா பேசவே இல்லை. பெருமாள் முதலியாரும் கடைசி வரைக்கும் பாட்டு எழுத வாய்ப்பு தரேன்னும் சொல்லலை, தரமாட்டேன்னும் சொல்லலை.

கருணாநிதி, அண்ணல் தங்கோ எல்லாரும் பாட்டு எழுதுனாங்க, உன் அப்பாவுக்கு வாய்ப்பே தரலை.

கடைசியில அந்தப் படத்தில அவர் நீதிபதியா நடிச்சாரு. அன்னைக்கு அவர் சொன்னது உங்கப்பாவுக்கு சுருக்குனு மனசுல தச்சிருக்கும்னு நினைக்கிறேன். தான் ஒரு பாடலாசிரியராக கடுமையா உழைச்சாரு.”

திருவாரூர் தங்கராசு கொஞ்சம் நிறுத்தி விட்டு, மீண்டும் சொல்லத் தொடங்கினார்.

“இதெல்லாம் நடந்து பல வருஷங்களுக்கு அப்புறம், 1972-ல் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் ‘தங்கதுரை’னு ஒரு படம் தயாரிச்சாரு. அந்தப் படத்துக்கு உங்கப்பா பாட்டு எழுத வராரு.

‘கவிஞர் வராரு, கவிஞர் வராரு’னு ஆபீசே பரபரப்பா இருக்கு.

உங்கப்பா வந்தாரு. உள்ள வந்ததும் பெருமாள் முதலியாரைப் பாத்து “தப்பா நினைச்சுகாதீங்க. ஊசி போட்டு இருக்கிறதால என்னால தரையிலயோ, சேர்லயோ உக்கார முடியாது. ஒரு மெத்தை போட சொல்லுங்க” அப்படின்னு சொன்னாரு.

உடனே எங்க இருந்தோ ஒரு மெத்தையை கொண்டுவர சொல்லி, அதைப் போட்டு ஒரு திண்டையும் போட்டாங்க.

உங்கப்பா அதுல சாய்ஞ்சு படுத்துக்கிட்டே பாட்டை சொல்லுறாரு. பக்கத்தில விஸ்வநாதன் மியூசிக் போடுறாரு.

பெருமாள் முதலியார், நான், காசிலிங்கம் எல்லாரும் தரையில உக்காந்து பாத்துகிட்டு இருக்கோம். உங்கப்பா பாட்டு வரிகளை சொல்றாரு.

“காலமகள் பாதையிலே போடா கண்ணே போ- அங்கு
காத்திருக்கும் வெற்றி உண்டு போடா கண்ணே போ
நீலக்கடல் அலைகளைப் போல் போடா கண்ணே போ-
என் நெஞ்சும் உன்னைத் தொடர்ந்துவரும் போடா கண்ணே போ.”

எந்த தயாரிப்பாளர் ‘பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா’ன்னு கேட்டாரோ, அதே தயாரிப்பாளர் இவருக்காக காத்து இருந்ததும், இவர் மெத்தையில சாஞ்சுகிட்டே பாடல் எழுதுனதும், ‘வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லை’ன்னு அன்னைக்குத்தான் எனக்கு புரிஞ்சது. இதைத் தான் நான் எல்லாருக்கும் சொல்லுறேன்.” என்று திருவாரூர் தங்கராசு என்னிடம் சொன்னார்.

இந்த நேரத்தில் ‘எனது சுயசரிதம்’ என்ற புத்தகத்தில், அப்பா இது பற்றி எழுதியதை அப்படியே அவரது வாய்மொழியாக தருகிறேன்.

“நான், கருணாநிதியோடு அடிக்கடி அந்தக் கம்பெனிக்குப் போவதும், கேலிப்பொருளாக ஆவதுமே வழக்கமாக இருந்தது. நல்ல சந்தர்ப்பத்துக்காக மேலும் காத்திருக்க வேண்டியதுதான் என்ற ஏக்கத்தோடு காரைக்குடிக்கு புறப்பட்டேன்.

துயரங்களை, ஏமாற்றங்களை, ஜீரணித்து எனக்குப் பழக்கமில்லை; வாய்விட்டு அழுதுவிடுவேன். அன்று ரெயிலிலும் கொஞ்ச நேரம் அழுதேன்.

‘இந்த சோதனைகள் எல்லாம் நன்மைக்குத்தான்’ என்று நான் அன்று கருதவில்லை. அந்தக் கண்ணன் என்னிடம் வைத்த கருணையினாலே அவை நன்மையாகவே முடிந்தன.

எழுத வேண்டும் என்ற வெறி என்னை ஆட்கொண்டது.

நிறையச் சிந்தித்தேன். மனம் என்னும் கிடங்கில் அவற்றைப் போட்டு வைத்தேன்.”

-தொடரும்.

‘தபலா’ ஹனுமந்து

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவில், ஹனுமந்து என்பவர் தபலா வாசித்துக் கொண்டு இருந்தார். எம்.எஸ்.வி. அவரை பேர் சொல்லாமல் ‘அண்ணன்’ என்றுதான் கூப்பிடுவார்.

காரணம், ஜூபிட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் எம்.எஸ்.வி. ஆபீஸ் பையனாக வேலை செய்தபோது, ஹனுமந்து அங்கே வாத்தியக் கலைஞராக இருந்தவர்.

பின்னர், இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் உதவியாளராக எம்.எஸ்.விஸ்வநாதன் இருந்தபோதும், ஹனுமந்துதான் தபலா கலைஞர்.

ஒருமுறை நான் அப்பாவுடன் கம்போசிங் சென்றிருந்தேன். வழக்கம் போல டிபன், காபி, அரட்டை எல்லாம் முடிந்த பிறகு, எம்.எஸ்.வி. டியூன் போட ஆரம்பித்தார்.

உடனே அப்பா “டேய்... இந்த பாட்டுல தபலாவுக்கு வேலை இல்லாத மாதிரி மாடர்னா ஒரு டியூன் போடு. இவன் வாசிக்கக்கூடாது” என்று சொல்ல, எம்.எஸ்.வி. முகத்தில் லேசான புன்னகை.

ஹனுமந்து வாய் நிறைய வெற்றிலையுடன் ‘பார்ப்போம்.. பார்ப்போம்..’ என்பது போல் சிரித்தார்.

படத்தின் இயக்குனர் அப்பாவிடம் “ஏன்ணே அவரு தபலா வாசிக்க வேணாங்கிறீங்க?” என்று கேட்டார்.

அப்பா... “நான் சினிமாவுல வாய்ப்பு தேடி அலைஞ்சுகிட்டு இருந்த போது, ஒரு மியூசிக் டைரக்டரை பாடல் பதிவு நடந்துகொண்டிருந்தபோது போய் பார்த்து வாய்ப்பு கேட்டேன். இவன் அங்க தபலா வாசிச்சுகிட்டு இருந்தான். மியூசிக் டைரக்டர் எதுக்கோ எழுந்து வெளியே போனார். அப்ப இவன் என்னப் பார்த்து “உடுமலை கவிராயர், தஞ்சை ராமையாதாஸ் இவங்க எல்லாம் இருக்கும்போது நீ என்ன பெருசா எழுதிடுவே”ன்னு கேட்டான்.

ஹனுமந்து, ‘ஆமாம்’ என்பது போல தலையை ஆட்டி சிரித்தார்.

“அதனால இன்னைக்கு இந்த பாட்டுக்கு இவன் வாசிக்கக்கூடாது” என்று அப்பா சொன்னார்.

கம்போசிங் தொடர்ந்தது. வேடிக்கை என்னவென்றால் ‘தபலா இருந்தே ஆக வேண்டும்’ என்ற வகையில் எம்.எஸ்.வி. டியூன் போட, ஹனுமந்து அதிகமாக குமுக்கி வாசிக்க, அப்பா சிரித்துக் கொண்டே வரிகளை சொல்லத் தொடங்கினார்.

அப்பா இப்படி சொன்னாரே தவிர ஹனுமந்து மீது அவருக்கு அதிகப் பிரியம் இருந்தது.

கம்போசிங் முடிந்து கிளம்பும் போது ஹனுமந்து அப்பாவிடம் “கவிஞரே மருந்து இருக்கா?” என்று கேட்டார்.

மருந்து என்றால் ‘விஸ்கி’.

அப்போது மதுவிலக்கு அமுலில் இருந்தது. பர்மிட் வைத்து இருந்தால் மட்டுமே குடிக்கலாம்.

உடனே அப்பா “முத்து, அந்த பீட்டர் ஸ்காட்ச் பாட்டிலை ஹனுமந்துகிட்ட குடு” என்று தனது உதவியாளர் முத்துவிடம் சொன்னார். (முத்து, அப்பாவின் பெரியப்பா மகன். அப்பாவின் உதவியாளராக இருந்தவர்)

பின்னாளில் ஒரு முறை, ஹனுமந்து எங்கள் வீட்டுக்கு வந்து வராண்டாவில் உட்கார்ந்து இருந்தார்.

வெளியே புறப்படுவதற்காக வந்த அப்பா, ஹனுமந்துவை பார்த்ததும் “உள்ள வராம ஏன் இங்க உட்கார்ந்து இருக்கீங்க?” என்று உரிமையோடு கோபித்துக் கொண்டார்.

தன் மகனின் வேலை விஷயமாக வந்திருப்பதாக அவர் சொல்ல, உடனே அவரை காரில் ஏற்றிக் கொண்டு போய், கையோடு அவர் மகனுக்கு வேலையை வாங்கித்தந்தார்.