ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்கள்?


ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்கள்?
x
தினத்தந்தி 11 Sep 2019 11:00 PM GMT (Updated: 11 Sep 2019 8:14 PM GMT)

ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் இனி பெண்கள் நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிய இயான் பிளமிங் தனது அனுபவங்களை வைத்து உருவாக்கிய துப்பறியும் உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1962-ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்டின் முதல் படமான ‘டாக்டர் நோ’ வெளியானது.

தொடர்ச்சியாக 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ளன. சீன் கானரி முதல் டேனியல் கிரேக் வரை 9 பேர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது தயாராகி வரும் 25-வது ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு ‘நோ டைம் டூ டை’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் டேனியல் கிரேக் கதாநாயகனாகவும் ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கின்றனர்.

இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இது தனது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்று டேனியல் கிரேக் அறிவித்துள்ளார் இதனால் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், தி வேல்ட் இஸ் நாட் எனாப், டை அனதர் டே ஆகிய படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பியர்ஸ் பிராசனன், இனிமேல் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரங்களில் பெண்களை நடிக்க வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் 40 ஆண்டுகளாக ஆண்களே நடித்துள்ளனர். இனி பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்ணை நடிக்க வையுங்கள்” என்று கூறியுள்ளார்.

Next Story