சினிமா செய்திகள்

நடிகை ஷாலினி பாண்டே மீது புகார் + "||" + Complaint on actress shalini pande

நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்

நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது.
 தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் விக்ரம் மகன் துருவ் நடிக்க ரீமேக்கும் ஆகிறது. தொடர்ந்து ஷாலினி பாண்டேக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

கொரில்லா படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த 100 சதவீதம் காதல் சமீபத்தில் திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கில் தயாராகும் நிசப்தம் படத்தில் மாதவன், அனுஷ்காவுடன் நடித்து வருகிறார். இட்டரி லோகம் ஒக்டே என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

மேலும் சில படங்களுக்கு கதை சொல்லி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெஸ்பாய் ஜோர்தார் என்ற இந்தி படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்க ஷாலினி பாண்டேவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை விட மனமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளை இந்தி படத்துக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

அவர் ஏற்கனவே நடித்த படங்கள் பாதியில் நிற்பதாக பட உலகினர் குறை சொல்கிறார்கள். இந்தி படத்தை முடித்து விட்டுத்தான் மற்ற படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஷாலினி பாண்டே மீது தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கங்களில் புகார் அளிக்க முடிவு செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.