பாடகி, விளம்பர மாடலாக மாறிய கதை..!


பாடகி, விளம்பர மாடலாக மாறிய கதை..!
x
தினத்தந்தி 23 Nov 2019 11:31 AM GMT (Updated: 2019-11-23T17:01:52+05:30)

சாஷா சேத்ரி... இந்தப் பெயர் உங்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால், இந்தப் பெயருக்குரிய பெண்ணை நாம் அதிகமுறை பார்த்திருப்போம்!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து, ஒரே இரவில் டிரெண்டிங் ஆனவர் இவர். சிகை அலங்காரமும், துறுதுறு முகபாவனையும், சாஷாவிற்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. இப்போது விளம்பரங்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் சாஷா, என்ன செய்கிறார் தெரியுமா? திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். சில திரைப்படங்களுக்கு பாடல் பாடிக்கொண்டிருக் கிறார். விளம்பர நடிகையாக நமக்கு தெரிந்த சாஷா பற்றி, நமக்கு தெரியாத விஷயங்களை அவரே சொல்கிறார், கேளுங்கள்.

உங்களை பற்றி கூறுங்கள்?

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதிதான் என்னுடைய சொந்த ஊர். அங்கிருந்து மேற்படிப்பிற்காக மும்பைக்கு வந்தேன். மும்பையில் இருக்கும் சேவியர் இன்ஸ்டியூட் ஆப் கம்யூனிகேஷன் கல்வி நிறுவனத்தில் விளம்பரப்பிரிவில் பட்டம் பெற்றேன். பின்னர் சில விளம்பர நிறுவனங்களிலும் பணியாற்றினேன். விளம்பரங்களுக்கு யோசனை கொடுப்பது, விளம்பர தயாரிப்பு பணியில் ஈடுபடுவது... என விளம்பர துறையின் எல்லா பிரிவுகளிலும் பணியாற்றியிருக்கிறேன். அப்படியே விளம்பரங்களில் நடிக்கவும் முயற்சித்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிறகு விளம்பர வாய்ப்பு கிடைத்தது எப்படி?

விளம்பரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், எனக்கு பரீட்சயமான இசை துறையில் கால் பதித்தேன். ‘ரிக்‌ஷாராணி’ என்ற பெயரில் இசை ஆல்பங்களை வெளியிட்டேன். அப்போதுதான் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4-ஜி விளம்பரத்தில் நடிப்பதற்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்தது. அதில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் கலந்து கொண்டேன். ஏனெனில் ரிக்‌ஷாராணி இசை ஆல்பம் நிகழ்ச்சிக்காக ‘டாம் பாய்’ வடிவில் மிக குறைந்த முடி இருக்கும்படி சிகை அலங்காரம் செய்திருந்தேன். அதனால் அரைகுறை மனதோடு தேர்விற்கு சென்றேன். ஆனால் இறுதியில் அந்த சிகை அலங்காரம்தான் எனக்கு விளம்பர வாய்ப்பை பெற்று தந்தது.

விளம்பர மாடலாக பிரபலமான சாஷாவின் உண்மை முகம் என்ன?

நான் ஒரு பாடகி. ஆனால் அந்த விஷயம் எனக்கு மட்டுமே தெரியும். விளம்பர மாடலாக பிரபலமான அளவிற்கு நான் இன்னும் பாடகியாக வெளிச்சம் பெறவில்லை. இருப்பினும் சமீபத்தில் ஒருசில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, நடிகை அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறேன்.

நீங்கள் 4-ஜி விளம்பரத்தில் நடித்தீர்கள். விளம்பரத்திற்காக நிறைய சவால்களை விடுத்தீர்கள். இது உங்களது நிஜ வாழ்க்கையை பாதித்தது உண்டா?

ஆம்..! விளம்பரத்திற்காக சவால் விடுவது போல நான் பேசியிருப்பேன். அதை நிஜம் என நம்பிய சிலர் என்னை அடிக்கடி வம்புக்கு இழுப்பது உண்டு. அவர்களிடம் நிலைமையை விளக்கிக்கூறி தப்பிப்பதற்குள் பெரும் போராட்டமாகிவிடும். அதனால் சமீப காலமாக முகத்தை மூடியபடி வெளியில் உலாவுகிறேன்.

சாஷா விளம்பரத்தில்தான் அடக்கமான பெண் என்கிறார்கள். மற்றபடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி உடையில் அசத்துகிறீர்களாமே? அப்படியா?


பெண் சுதந்திரம் எல்லாம் திருமணம் வரைதான், என்ற கருத்தை நாம் நம்புகிறேன். அதனால் என்னுடைய சுதந்திர வாழ்க்கையை அனுபவிக்கிறேன். அதற்காக அரைகுறை ஆடை அணிவதில்லை. பேஷன் உலகிற்கு டிரெண்டிங்காக இருக்கும் உடைகளை எல்லாம் அணிந்து மகிழ்ந்திருக்கிறேன்.

Next Story