சென்னை பிரசாத் ஸ்டூடியோவில், பாரதிராஜா தலைமையில் இயக்குனர்கள் முற்றுகை போராட்டம் - இளையராஜாவை வெளியேற்ற எதிர்ப்பு


சென்னை பிரசாத் ஸ்டூடியோவில், பாரதிராஜா தலைமையில் இயக்குனர்கள் முற்றுகை போராட்டம் - இளையராஜாவை வெளியேற்ற எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Nov 2019 11:00 PM GMT (Updated: 28 Nov 2019 10:00 PM GMT)

இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியேற்றக்கூடாது என்று பிரசாத் ஸ்டூடியோவில் இயக்குனர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரபல பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ அமைத்து இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். பிரசாத் ஸ்டூடியோவின் உரிமையாளரும், பழம்பெரும் தயாரிப்பாளருமான மறைந்த எல்.வி.பிரசாத் இந்த அலுவலகத்தை இளையராஜாவுக்கு வழங்கி இருந்தார்.

தற்போது அந்த ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவை வெளியேற்ற நிர்வாகத்தினர் நிர்ப்பந்தித்ததாக கூறப்பட்டது. அவர் பயன்படுத்திய அலுவலகத்தின் ஒரு பகுதியை வேறு பணிகளுக்கு ஒதுக்கினர். இதை எதிர்த்து இளையராஜா சார்பில் ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று டைரக்டர் பாரதிராஜா கண்டித்து இருந்தார்.

இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான், தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி, செழியன் வேலுபிரபாகரன், பெப்சி சிவா, ஜீவன், நடிகர் ரமேஷ் கண்ணா, இசையமைப்பாளர் தினா, எடிட்டர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் உள்ளிட்ட திரைத்துறையுலகினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.

அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கேட்டை இழுத்து மூடி பாதுகாவலர்களை நிறுத்தி இருந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். போலீசார் இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர்.

பின்னர் பாரதிராஜா, சீமான், பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தினார்கள். இளையராஜாவை வெளியேற்றக்கூடாது என்று மனுவும் அளித்தனர்.

பின்னர் வெளியே வந்த பாரதிராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

“திரை உலகில் இசைஞானி இளையராஜாவிற்கு ஒரு சிறிய பிரச்சினை என்ற காரணத்தின் நிமித்தம் என்னுடைய அழைப்பை ஏற்று இவ்வளவு திரைத்துறையினர் கூடியது மகிழ்ச்சி. 45 ஆண்டுகளாக தன்னுடைய பணிகளை இளையராஜா இந்த ஸ்டூடியோவில்தான் செய்து வந்தார்.

சுமூக பேச்சுவார்த்தை நடத்தத்தான் சென்றோம், இந்த இடத்தைவிட்டு செல்ல வேண்டும் என்றால் ஒரு கால அவகாசம் வேண்டும். ஆனால் திடீரென்று இளையராஜாவை காலி செய்ய சொல்லி வலியுறுத்தியுள்ளனர். அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளோம்,

அந்த காலகட்டத்திற்குள் நாங்கள் இளையராஜாவிற்கு மற்றொரு ஏற்பாடு செய்வோம். குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பின்னர் இளையராஜா வெளியேறுகிறார் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர் இதேபோல் மற்றொரு இடத்தை கலைக்காக தேர்ந்தெடுத்து கொள்கிறார் என்றுதான் அர்த்தம். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

Next Story