வருமான வரி சோதனைக்கு பின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய்


வருமான வரி சோதனைக்கு பின்   ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய்
x
தினத்தந்தி 7 Feb 2020 11:15 PM GMT (Updated: 2020-02-08T00:44:09+05:30)

நடிகர் விஜய் வருமான வரி சோதனைக்கு பின் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வரும் அவசரத்தில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்து விட்டு தற்போது நெய்வேலியில் முகாமிட்டுள்ளனர்.

அங்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனங்கள் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். பைனான்சியர் அலுவலகங்களில் இருந்து ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது.

ஆவணங்களில் இருந்த தகவல் அடிப்படையில் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடமும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சென்னை பனையூரில் உள்ள வீட்டுக்கு காரில் அழைத்து வந்தும் விசாரித்தனர். வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை நேற்று முன்தினம் இரவு முடிந்தது. இதையடுத்து உடனடியாக விஜய் நெய்வேலிக்கு புறப்பட்டு சென்று நேற்று மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர். படப்பிடிப்புக்கு வெளியே ஏராளமான ரசிகர்களும் திரண்டு நின்று மகிழ்ச்சி கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் திரைக்கதையாசிரியர் ரத்னகுமார் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை எதிர்பார்ப்பதாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. பிகில் பட விழாவில் விஜய் அரசியல் பேசி பரபரப்பு ஏற்படுத்தினார். வருமானவரி சோதனை பற்றி மாஸ்டர் படத்தின் பாடல் விழாவில் அவர் பேசுவார் என்ற பதிவுகள் வலைத்தளத்தில் பரவி வருகின்றன.

Next Story