சினிமா செய்திகள்

இந்தியன்-2 விபத்துக்கு யார் பொறுப்பு? கமல்ஹாசனுக்கு பட நிறுவனம் பதில் + "||" + Movie company's response to Kamal Haasan

இந்தியன்-2 விபத்துக்கு யார் பொறுப்பு? கமல்ஹாசனுக்கு பட நிறுவனம் பதில்

இந்தியன்-2 விபத்துக்கு யார் பொறுப்பு?  கமல்ஹாசனுக்கு பட நிறுவனம் பதில்
இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து கமல்ஹாசனுக்கு பட நிறுவனம் பதில் அளித்துள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து 3 பேர் பலியான விபத்து திரையுலகினரை உலுக்கியது. இதையடுத்து படப்பிடிப்புக்கு அளிக்கும் பாதுகாப்பு குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதினார்.

அதில் “சிரித்து பேசியவர்கள் இப்போது நம்மோடு இல்லை. படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடை நிலை ஊழியர்கள்வரை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனமே ஏற்க வேண்டும். பாதுகாப்பு குறித்து படக்குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி படப்பிடிப்புக்கு திரும்புவதற்கான வழிவகையை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து லைகா நிறுவனம் கமல்ஹாசனுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“தாங்கள் கடிதம் எழுதுவதற்கு முன்பாகவே தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து விட்டோம். விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியன்-2 படப்பிடிப்பின் பாதுகாப்பு விஷயத்தில் லைகா நிறுவனம் குறை எதுவும் வைக்கவில்லை. லைகா நிறுவனம் உலக தரத்திலான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்டது.

அனுபவம் வாய்ந்தவர்கள் மேற்பார்வையில் படப்பிடிப்பு நடந்ததால் அசம்பாவிதம் ஏற்படாது என்று நம்பினோம். ஆனால் விபத்து ஏற்பட்டு விட்டது. இதற்கு அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் இயக்குனர் மற்றும் உங்களுடைய மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும் இருந்தன என்பதை நினைவுபடுத்துகிறோம்.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.