தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை


தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2020 11:30 PM GMT (Updated: 28 July 2020 9:00 PM GMT)

சினிமா படப்பிடிப்புகளை தொடங்கவும், தியேட்டர்களை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குனருமான பாரதிராஜா தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்து, தங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டார்கள்.

தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் தங்களது மனுவில், சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கும், தியேட்டர்களை திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், டிக்கெட் விலையை குறைக்க வேண்டியுள்ளதால் சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 8 சதவீத உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் எனவும், தனியாக உள்ள சிறிய தியேட்டர்களை மினி பிளெக்ஸ் அல்லது மல்டி பிளெக்சாக மாற்றுவதற்கு பெறப்படும் அனுமதியினை எளிதாக்க வேண்டும் எனவும், தியேட்டர்களில் தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால், புரொஜக்டர் ஆபரேட்டருக்கு வேலை இல்லாத சூழ்நிலையில் தியேட்டர்களில் புரொஜக்டர் ஆபரேட்டர் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற முறையை முற்றிலும் நீக்க வேண்டும் எனவும், பொதுப்பணித் துறையிடம் இருந்து ஒவ்வொரு வருடமும் சி-பாரம் லைசென்சை புதுப்பிக்க வேண்டும் என்ற முறையில் இருந்து 3 வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்கள்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளிடம் அவர்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்டத்துறை அமைச்சர்களோடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஆவன செய்வதாக தெரிவித்தார்.

அப்போது, திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், கே.ராஜன், சுரேஷ் காமாட்சி மற்றும் லலித் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story