சினிமா செய்திகள்

ஏவி.எம். கார்டன் ஸ்டூடியோ திருமண மண்டபமாக மாறுகிறது - யோகிபாபு படம் கடைசி படப்பிடிப்பாக அமைந்தது + "||" + AVM Garden Studio turns into a wedding hall - Yogibabu's film is set to be the last shoot

ஏவி.எம். கார்டன் ஸ்டூடியோ திருமண மண்டபமாக மாறுகிறது - யோகிபாபு படம் கடைசி படப்பிடிப்பாக அமைந்தது

ஏவி.எம். கார்டன் ஸ்டூடியோ திருமண மண்டபமாக மாறுகிறது - யோகிபாபு படம் கடைசி படப்பிடிப்பாக அமைந்தது
சென்னை ஏவி.எம்.ல் உள்ள ‘கார்டன் ஸ்டூடியோ’ மற்றும் ‘டப்பிங்’ தியேட்டர் திருமண மண்டபமாக மாறுகிறது. யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படம் கடைசி படப்பிடிப்பாக அமைந்தது.
சென்னை,

சினிமா தொழில் நாளுக்கு நாள் நசிந்து கொண்டு வருவதை தொடர்ந்து, சென்னையில் அமைந்திருந்த ஸ்டூடியோக்களும், தியேட்டர்களும் காணாமல் போய்விட்டன. அவை இருந்த இடம் தெரியாத அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதற்கு ஏவி.எம். ஸ்டூடியோவும் விதிவிலக்கு அல்ல என்றாகிவிட்டது.


ஏவி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது. இன்னொரு பகுதி ஆஸ்பத்திரியாக மாறியிருக்கிறது. ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரும் வேறு ஒரு வடிவத்துக்காக இடிக்கப்படுகிறது. ஏவி.எம். ஸ்டூடியோவின் அழகான அடையாளமாக இருந்த ‘கார்டன் ஸ்டூடியோ’ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது.

‘கார்டன் ஸ்டூடியோ’வில் பரந்து விரிந்த புல்வெளியும், அதற்கு நடுவில் ஒரு வட்ட வடிவமான மண்டபமும் உள்ளன. அதையொட்டி ஒரு ‘டப்பிங்’ தியேட்டரும், பங்களாவும் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான படப்பிடிப்புகளும், ‘டப்பிங்’ பணிகளும் நடந்த அந்த இடம், ஸ்டூடியோவுக்கே வசீகர தோற்றம் தந்தது. காலமாற்றத்தினால் ‘கார்டன் ஸ்டூடியோ’வில் படப்பிடிப்பு நடைபெறுவது குறைந்து கொண்டு வந்தது. ‘டப்பிங்’ பணிகளும் அபூர்வமாகவே நடைபெறுகிறது.

இந்த நிலையில் ‘கார்டன் ஸ்டூடியோ’வை திருமண மண்டபமாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று அங்கு நடந்தது. அதுவே ‘கார்டன் ஸ்டூடியோ’வில் நடந்த கடைசி படப்பிடிப்பாக அமைந்துவிட்டது. அந்த இடம் விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெறுகின்றன.