மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்


மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
x
தினத்தந்தி 21 Nov 2020 11:24 PM GMT (Updated: 21 Nov 2020 11:24 PM GMT)

‘ருத்ரதாண்டவம்.’ சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கருவை அடிப்படையாக வைத்து நகைச்சுவையாக கதை எழுதப்பட்டு இருந்தது. அது ஒரு நகைச்சுவை படம்.

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘ருத்ரதாண்டவம்.’ அது ஒரு நகைச்சுவை படம். சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கருவை அடிப்படையாக வைத்து நகைச்சுவையாக கதை எழுதப்பட்டு இருந்தது. சிவன் வேடத்தில் வி.கே.ராமசாமி நடித்து இருந்தார். சிவன் கோவில் பூசாரியாக நாகேஷ் நடித்து இருந்தார். கதைப்படி, நாகேஷ் வறுமையில் வாடுகிறார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு பெரிய தொகை தேவைப்படுகிறது. அதற்காக சிவன் முன்பு அழுது புலம்புகிறார். “உனக்கு தினம் பூஜை செய்கிறேனே...அதற்காக கண் திறந்து பார்த்து என் வேண்டுதலை நிறைவேற்றக் கூடாதா? உண்மையிலேயே நீ கடவுள்தானா? அல்லது வெறும் கல்லா?” என்று உரிமையோடு சிவனை திட்டுவார்.

அப்போது பெரும் புயல் போல் காற்று வீசும். நாகேஷ் முன்பு சிவன் (வி.கே.ராமசாமி) தோன்றுவார். “நீ எனக்கு பூஜை செய்வதால் கேட்டதை எல்லாம் கொடுக்க முடியுமா? வாழ்வும், வறுமையும் அவரவர் விதிப்படி நடக்கும். அதுதான் மனித வாழ்க்கை..” என்று வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து கூறுவார். இது, ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் கதை.

இந்த கதையை தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றி, அரசியல் நையாண்டி கலந்து நகைச்சுவையாக திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் சக்தி சிதம்பரம். இவர், ‘இங்லீஷ்காரன்,’ ‘கோவை பிரதர்ஸ்,’ ‘என்னம்மா கண்ணு,’ ‘சார்லி சாப்ளின்,’ ‘மகாநடிகன்’ உள்பட பல படங்களை தயாரித்து டைரக்டு செய்தவர். இப்போது யோகிபாபுவை கதை நாயகனாக நடிக்க வைத்து, ‘பேய் மாமா’ என்ற நகைச்சுவை படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், சக்தி சிதம்பரம் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். ‘ருத்ரதாண்டவம்’ படத்தை ‘ருத்ரதாண்டவம் 2021’ என்ற பெயரில், மீண்டும் உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். வி.கே.ராமசாமி நடித்த கதாபாத்திரத்தில் சிவன் வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று ஒரு படஅதிபர் யோசனை சொன்னார். அவரிடம் வடிவேல் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சில வழக்குகள் இருப்பதால், அவரை நடிக்க வைக்க முடியாது என்பதை சக்தி சிதம்பரம் விளக்கினார். வடிவேலுவுக்கு பதில் சந்தானத்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்.

Next Story