சினிமா செய்திகள்

அரசியல் கட்சி இல்லை: ரஜினிகாந்த் முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் கருத்து + "||" + No political party Regarding Rajinikanth decision Actor-actress comment

அரசியல் கட்சி இல்லை: ரஜினிகாந்த் முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் கருத்து

அரசியல் கட்சி இல்லை: ரஜினிகாந்த் முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினிகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்ததற்கு திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நீங்கள் எடுத்த முடிவு 100 சதவீதம் சரியானது. எங்களுக்கு எல்லாவற்றையும் விட உங்கள் ஆரோக்கியம்தான் முக்கியம். நீங்கள் சுயநலம் இல்லாமல் உங்களை நம்பியவர்களுக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதுமே மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர். அந்த செயல்தான் உங்களை உயர்வான மனிதராக ஆக்கி இருக்கிறது. உங்களுடையை நல் ஆரோக்கியத்துக்காக எப்போதுமே ராகவேந்திரரை நான் பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்’ என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அன்புள்ள ரஜினிகாந்த் சார். உங்களுடைய முடிவு தமிழர்களின் இதயங்களை உடைத்து விட்டது. உங்கள் ஆரோக்கியத்தின் முன்னால் வேறு எதுவும் பெரிது அல்ல என்பதை என்னால் உணர முடிகிறது. உங்களின் நலம் விரும்பியாக, தோழியாக உங்கள் முடிவை ஆதரிக்கிறேன். எனக்கு நீங்கள் விலைமதிப்பற்றவர். முக்கியமானவர். ஆரோக்கியத்தை கவனியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உங்களை போல சிறந்த அரசியல்வாதியை பெற எங்களுக்கு தகுதி இல்லை. எங்களுக்கு நீங்கள் முக்கியம். ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள். எப்போதும் உங்களை நேசிப்போம்’ என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்பார்த்ததுத்தான். எப்போதோ சொல்லி இருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். ரஜினியின் முடிவுக்கு பாராட்டுகள். நீங்கள் பூரண நலத்துடன் நீடூழி நிம்மதியாக வாழவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி டுவிட்டரில், “உங்கள் ஆரோக்கியம்தான் எங்களுக்கு அதிசயம், அற்புதம்” என்று கூறியுள்ளார்.